Published : 09 Dec 2018 11:24 AM
Last Updated : 09 Dec 2018 11:24 AM
உலகில் அதிவேகமாக வளரும் முதல் 10 நகரங்களில், திருப்பூர் மாநகரம் 6-ம் இடத்தை பிடித்துள்ளது.
‘ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதாரம்’ எனும் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 2019 தொடங்கி 2035-ம் ஆண்டுக்கு 8.36 சதவீதம் சராசரி வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளரும் முதல் 10 இடங்களில், தமிழகத்தைச் சேர்ந்த திருப்பூர், திருச்சி, சென்னை ஆகிய 3 இடங்கள் இடம்பிடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
குக்கிராமமாக இருந்து...
இதுதொடர்பாக திருப்பூர் தொழில் துறையினர் சிலர் கூறியதாவது:
வளரும் நகரங்களில் ஒன்றாக திருப்பூர் இடம்பிடிக்க முதன்மைக் காரணம், பின்ன லாடை தொழில்தான். 40 ஆண்டுகளுக்கு முன்பு, மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமமாகத்தான் திருப்பூர் இருந்தது. அன்றைக்கு ஊராட்சியாக கூட இல்லை. திருப்பூர் குக்கிராமம் தான். இன்றைக்கு பின்னலாடைத் தொழிலின் அபரிமிதமான வளர்ச்சியால், உலக அளவில் உள்ள முன்னணி நகரங்களுடன் பொருளாதார ரீதியாக போட்டிபோடும் நகரமாக திருப்பூர் வளர்ந்திருப்பது பெருமைக்குரிய விஷயம் தான். இதற்கு, பின்னலாடைத் துறையின் வளர்ச்சிதான் முக்கியக் காரணம்.
அரசிடம் போதிய ஆதரவு இல்லாத நிலையிலும், இங்குள்ள தொழில்முனை வோர்கள் இயல்பாகவே தொழிலையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டுவதால், தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி செல்கிறது. மனித குலத்துக்கு உணவுக்கு அடுத்தபடியாக ஆடை எப்போதும் தேவையான ஒன்று. ஆடை அத்தியாவசியம் என்பதைத் தாண்டி, மனிதன் நாளொன்றுக்கு சராசரியாக 4 ஆடைகள் வரை உடுத்தும் நிலையை அடைந்துள்ளான்.
எனவே, மற்ற துறைகளைவிட ஜவுளித்துறை அதீத வளர்ச்சி அடைய இதுவும் ஒரு காரணம். அசாமின் கவுகாத்தி நகரம் தொடங்கி தமிழகத்தின் கன்னியாகுமரி வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வரும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்குகிறது. இதையொட்டி, அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் நகரமாக இருக்கும் திருப்பூர், தொடர்ந்து வளரக் கூடிய வாய்ப்பு உள்ளது. லண்டனில் செயல்படும் சர்வதேச ஆய்வு நிறுவனத் தாலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வளர்ச்சியை எட்ட, நகரின் உட்கட்டமைப்பும் மிக முக்கியம். நகரின் தேவைக்கேற்ப, வளர்ச்சிக்கான போதுமான கொள்கை முடிவுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
என்னென்ன தேவை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் கூறும்போது, ‘தொழில் சார்ந்த பின்னலாடை ஏற்று மதியை மட்டும் வளர்ச்சியாக பார்க்க முடியாது. தனிநபர் வருவானம், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு போன்றவையும் வளர்வதுதான் நிலையான வளர்ச்சி. கல்வி, வேலைவாய்ப்பு, குடிநீர், உணவு, சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நகரின் வளர்ச்சி இருக்க வேண்டும்' என்றார்.
அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படும்
திருப்பூர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘ஆக்ஸ்போர்டு பொருளாதாரம் நிறுவன ஆய்வில், திருப்பூர் தொழில் வளர்ச்சி நகரமாக இருப்பதால் வேகமாக வளர்கிறது. மாவட்ட நிர்வாகம் என்ற வகையில், அரசின் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவோம். தொழில் வளர்ச்சி மற்றும் திருப்பூர் வளர்ச்சிக்கு அரசின் திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும். எதிர்காலத்தில் உட்கட்டமைப்பு, தொழிலாளர்களுக்கு வீட்டுவசதி திட்டங்கள் பரிந்துரைக்கப்படும்' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT