Published : 31 Dec 2018 08:32 AM
Last Updated : 31 Dec 2018 08:32 AM
தனக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது தெரியாமல், ரத்தம் கொடுத்த இளைஞர், பிறகு அதை அறிந்து, பிறருக்கு செலுத்திவிடாமல் தடுக்க முயன்று தோல்வியுற்று தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்திய ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்தது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட் டது. அவர் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணையில், சாத்தூர் கர்ப் பிணிக்கு செலுத்திய ரத்தம், சிவகாசி அரசு மருத்துவமனையில் கமுதி இளைஞர் ஒருவர் தானமாகக் கொடுத்தது என்பது தெரிய வந்தது. அந்த இளைஞர் சில நாட்கள் கழித்து, வெளிநாடு செல்வதற்காக மருத்துவப் பரிசோதனை செய்தபோது தான் எச்ஐவி பாதிப்பு இருப்பது அவருக்கே தெரியவந்துள்ளது. உடனே அந்த ரத்தத்தை யாருக்கும் செலுத்தி விடாமல் தடுக்க, சிவகாசி மருத்துவ மனைக்கு சென்றபோது, சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டு, அவர் பாதிக்கப்பட்டிருப்பதை அந்த இளைஞர் அறிந்தார்.
சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களே இதற்கு காரணம் என்றாலும், தெரிந்தோ, தெரியாமலோ கர்ப்பிணிக்கு எச்ஐவி தாக்க, தானும் ஒரு காரணமாகி விட்டோம் என மன விரக்தி அடைந்தார். கமுதி அருகே உள்ள சொந்த ஊரில் 3 நாள் குடும்பத்தினர் யாரிடமும் பேசாமல் இருந்தார்.
தற்கொலைக்கு முயற்சி
இது போன்ற சூழலில்தான் டிச. 26-ல் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள திட்டமிட்டார். இதற்காக எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, பிறகு மதுரை அரசு மருத்துவ மனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், 3 நாட்களுக்கு பிறகு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.
தானே முன்வந்து தடுக்க முயற்சி
எச்ஐவி பாதித்த தனது ரத்தத்தை பிறருக்கு செலுத்தி அவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனத் தடுக்க முயன்ற இளைஞரால்தான் கர்ப் பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரமே வெளியில் தெரிந்தது. தற்போது, இது தமிழக அரசு மருத்துவ மனைகள் மற்றும் சுகாதாரத் துறையில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற் படுத்தி உள்ளது.
பல்வேறு புதிய மாற்றங்கள், பரி சோதனை, கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரத்த வங்கி உட்பட முக்கிய சுகாதாரப் பிரிவில் ‘அவுட்சோர்சிங்’ ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் நியமனத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இது போன்ற தவறு கள் நடக்காமல் தடுக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டுள்ளனர். விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த இளைஞரின் மரணம் பாடம் கற்றுக் கொடுத்துள்ளது.
பெற்றோர், உறவினர் வேதனை
இளைஞரின் பெற்றோர், உறவினர் கள் கூறும்போது, கர்ப்பிணியை காப்பாற்ற முயன்று, தோற்றுபோன எனது மகன் உயிரைவிட்டுள்ளார். மகனை இழந்து தவிக்கும் எங்க ளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றனர்.
மருத்துவத் துறைக்கு பாடம்
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, இனி மேல் உயிர் வாழ்ந்து என்ன புண்ணியம், விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள் என அழுது புலம்பிய உருக்கமான தகவல்களும் வெளியாகின.
இது போன்ற தகவல்களை அறிந்த அந்த இளைஞர், நம்மால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டு விட்டதே என அழுது புலம்பி இருக்கிறார். பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை அவரது குடும்பத்தினர் எப்படி எதிர் கொள்வார்கள். உறவினர்கள் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்க வாய்ப்புள்ளதே என சிந்தித்து வேதனைப்பட்டு இருக்கிறார்.
இது போன்ற சூழலில் இனிமேல், எச்ஐவி நோயுடன் போராடி வாழ்வதை விட உயிர்விடுவதே மேலானது என்ற முடிவில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த இளைஞரின் தற்கொலை மருத்துவத் துறைக்கு விழிப்புணர்வை ஊட்டும் பாடமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT