Published : 12 Dec 2018 02:04 PM
Last Updated : 12 Dec 2018 02:04 PM

கஜா புயலால் சேதமடைந்த பாரதியாரின் நினைவு மண்டபத்தை, அரசே சீரமைத்துத் தர வேண்டும்: மேல நாகையில் பாரதி ஆர்வலர்கள் கோரிக்கை

கஜா புயலால் சேதமடைந்த பாரதியாரின் நினைவு மண்டபத்தை தமிழக அரசே சீரமைத்துத் தர வேண்டுமென, பாரதியாரின் பிறந்தநாள் விழாவில் பாரதி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர வேட்கையைத் தூண்டும் புரட்சிகர கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியார், கடந்த 1918-ம் ஆண்டு ஆங்கிலேய அரசின் காவல் துறையால் தேடப்பட்டபோது, சில நாட்கள்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள  மேல நாகையில் தலைமறைவாக இருந்தார். நண்பர் ரங்கசாமியின் உதவியுடன் ஒரு ஆசிரமத்தில் தங்கியிருந்த பாரதியார் அந்த  ஆசிரமத்தில் உள்ள தியான மண்டபத்தில்  தியானம்  செய்தார். அதற்கான ஆதாரங்கள் சித்திர பாரதி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாருக்குள்ளே  நல்ல நாடு பாரத நாடு என்ற பாடலையும் இங்குதான் பாரதி எழுதியதாகவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

இதனால் பாரதியின் நினைவைப் போற்றும் வகையில், மேல நாகையைச் சேர்ந்த இளைஞர்கள் பாரதியார் தங்கியிருந்த இடத்தில் சிலை அமைத்து, நினைவிடமாகப் போற்றி வருகின்றனர். அங்கு நேற்று பாரதியாரின் பிறந்த நாள் விழா மேல நாகை பாரதி இளைஞர் நற்பணி மன்றத்தினருடன்  இணைந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.

பாரதி பூமிநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் தாமோதரன், செயலாளர் பகவான்தாஸ், மன்னார்குடி கிளைத்தலைவர் சரஸ்வதி,  செயலாளர் ஏசுதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பொன்முடி, பிச்சைக்கண்ணு,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர் விஜயகுமார், மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செய்தனர்.

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி  பள்ளி மாணவர்கள் வரைந்த 1179 ஓவியங்களை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில்  ஓவியாஞ்சலி என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது .

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் பாரதியாரின் நினைவு மண்டபம், கஜா புயலால் சேதமடைந்ததை சுட்டிக்காட்டி, இதனை சீரமைக்க தமிழக அரசு  முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோவைப் பார்க்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x