Published : 15 Dec 2018 08:59 AM
Last Updated : 15 Dec 2018 08:59 AM

அரசியல் எதிரிகளை பழிவாங்க திமுகவில் இணைந்தாரா செந்தில்பாலாஜி?

அதிமுகவில் உள்ள தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்த தாகக் கூறப்படுகிறது.

அமமுக மாநில அமைப்புச் செயலாளர், கரூர் மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அமமுகவில் இருந்து விலகி, திமுகவில் நேற்று இணைந்தார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்லலாம் என டிடிவி.தினகரன் முடிவெடுத்த நிலையில், செந்தில் பாலாஜி தேர்தலைச் சந்திக்க விரும்பிய தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து போராட்டங் கள், அமமுக கட்சி தொடங்கியது, கரூர் மாவட்டத்தில் நடந்த 3 உண்ணா விரதப் போராட்டங்கள் உட்பட அனைத் துக்கும் செந்தில்பாலாஜியே செலவு செய்து வந்துள்ளார்.

அமமுகவை இணைக்க உடன்பாடில்லை

கரூர் மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு, மேடை அமைப்பு, நாற்காலி, சவுண்ட் சர்வீஸ் ஆகியவற்றுக்கு என செந்தில்பாலாஜி சில கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளார். தினகரன் பொருளாதார ரீதியாக கட்சிக்கு எதுவும் செய்யவில்லை. அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதில் செந்தில்பாலாஜிக்கு உடன்பாடில்லை. இவற்றின் காரணமாகவே அமமுகவை விட்டு விலக முடிவு செய்தார்.

தனது அமைச்சர் பதவி பறி போக காரணம் என செந்தில் பாலாஜி நினைக்கும் கரூர் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரையை நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும், தான் வகித்த அமைச்சர் பதவியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருப்பதால் தனது அரசியல் எதிரிகளோடு இணைந்து பணியாற்ற விரும்பாததாலும், அதிமுகவின் எதிர் காலம் கேள்விக்குறியாக இருப்பதாக அவர் நினைப்பதாலும் அதிமுகவுடன் அமமுக இணைவதையோ, தான் அதிமுகவுக்குச் செல்வதையோ அவர் விரும்பவில்லை.

இதுகுறித்து, செந்தில்பாலாஜியை நன்கு அறிந்த சிலர் கூறியபோது, ‘‘அதிமுகவை அரவக்குறிச்சி தொகுதியில் தோற்கடிக்க வேண்டும். தான் அரவக் குறிச்சி தொகுதியில் வெற்றி பெறவேண் டும். மேலும் வருகின்ற நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக வெற்றிபெற வாய்ப்பு இருப்பதால் அதுதான் தன் அரசியல் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பானது என திமுகவைத் தேர்ந்தெடுத்துள்ளார்’’ என்றனர்.

ஏராளமான வழக்குகள்

இதற்கிடையில், ‘‘செந்தில் பாலாஜி மீது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக தமிழகம் முழுவதும் ஏராளமான வழக்குகள் உள்ளன. அதேபோல, சட்டவிரோத மது விற்பனை, நிலத்தகராறு தொடர்பாக அவரது தம்பி அசோக் மீதான ஆள் கடத்தல் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாப்பு தேவை என்பதால் திமுகவை நாடியுள்ளார்’’ என்று கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள் சிலர் கூறுகின்றனர்.

திமுகவினர் வரவேற்பு

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை திமுக செயல்பாடுகள் தொண்டர்கள் மற்றும் பொது மக்களிடம் திருப்தியை ஏற்படுத்த வில்லை. இந்நிலையில் செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தால் கட்சியின் செயல்பாடுகள் விறுவிறுப்படையும், இது வரும் தேர்தல்களில் வெற்றிபெற உதவும் என்பதால், திமுக தொண்டர்கள் மத்தியில் அவரது வருகைக்குப் பெருத்த வரவேற்பு உள்ளது. திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் அளவில் சிலர் வேண்டுமானால் செந்தில்பாலாஜி வருவதை விரும் பாமல் இருக்கலாம். ஆனால், கரூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகிகள் பதாகை வைத்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் செந்தில்பாலாஜிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முன்னாள் எம்.பி. கே.சி.பழனி சாமியிடம் கேட்டபோது, ‘‘அரசியல் என்றால் கட்சியில் புதிதாக இணைவது என்பது சாதாரணமான ஒன்று. அதுதான் அரசியல். அரசியல் என்றால் அப்படிதான் இருக்கும்’’ என்றார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மூலம் திமுகவில் செந்தில்பாலாஜி சேர்ந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அரவக்குறிச்சி வேட்பாளராக போட்டி யிடும் வாய்ப்பு, மாவட்டச் செயலாளர் பதவி ஆகியவற்றை செந்தில் பாலாஜி கேட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்த லில் திமுக வேட்பாளரை (சின்னசாமியை) வெற்றிபெற வைப்பது தன் பொறுப்பு எனக் கூறியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம், தன் அரசியல் எதிரியான மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பி துரையை தோற்கடிப்பதாக போட்ட சபதத்தை நிறைவேற்றுவதுடன் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதன் மூலம், தனது அரசியல் எதிர்காலம் பிரகாசமாகும் என செந்தில்பாலாஜி கணக்கு போட்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x