Published : 17 Dec 2018 03:06 PM
Last Updated : 17 Dec 2018 03:06 PM

"அப்பா பாசம்னா என்னன்னு அவரை பார்த்த பிறகே புரிந்தது": மீனாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் எண்ணற்ற குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவின்றி நின்றனர். அதேபோன்று, பலரும் தங்கள் குழந்தைகளை இழந்து வாடினர்.

அப்படி, தமிழகத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிக்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நாகை மாவட்டத்தில் அன்னை சத்யா இல்லம் என்ற காப்பகத்தை சமூக நலத்துறை மூலமாக தொடங்கினார்.

அந்த காப்பகத்தில் இருந்த 2 வயது குழந்தை மீனாவை, அப்போது மீனவர்கள் காப்பகத்தை கவனித்து வந்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். ராதாகிருஷ்ணனை மீனா 'அப்பா' என்றே அழைப்பார். அவரது மனைவியும் மீனாவுடன் நெருக்கமாக இருப்பார். பல்வேறு பணி நெருக்கடிகள் மற்றும் பணி மாறுதல்கள் ஏற்படும்போதும் குறிப்பிட்ட இடைவெளியில் மீனாவை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். ஆனால், கடந்த சில வருடங்களாக மீனாவை காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது 16 வயதான மீனா, நாகை மாவட்டத்தில் உள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் 'கஜா' புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிடும் பணிகளை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டிருந்தார். இதையறிந்த மீனா அவரைக் காண வேண்டும் என ஆசைகொண்டுள்ளார். அவர் ஆசைப்படியே, சுகாதார துறை செயலாளரும் இரு தினங்களுக்கு முன்பு மீனாவை அவர் படிக்கும் பள்ளிக்கே சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

"அவரை பார்த்த பிறகே தந்தை பாசம் என்றால் என்ன என்பதே எனக்கு தெரியும்" என நெகிழ்ச்சியடைந்தார் மீனா.

"ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகே மீனா தன் வாழ்க்கையின் முக்கியத்தை புரியத் தொடங்கியுள்ளார்" எனக்கூறும் பள்ளி தலைமை ஆசிரியை ஷீலா கிரேஸ், சில பாடங்களில் சிரமம் கொண்டுள்ள மீனா, இதன்பிறகு கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார் என நம்புவதாக தெரிவித்தார்.

மீனாவைப் போன்றே சுனாமியால் பெற்றோரை இழந்தவர் சவுமியா. சுனாமி ஏற்பட்ட மறு ஆண்டு அந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மீனாவும், சவுமியாவும் மிகவும் நெருக்கமாக ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வருகின்றனர். சவுமியா தற்போது நாகப்பட்டினத்தில் உள்ள ஏடிஎம் கல்லூரியில் பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

"இருவரும் ஒருக்கொருவர் மகிழ்ச்சியுடன் வளர்வதை காண்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.அன்னை சத்யா இல்லத்தில் வளர்க்கப்பட்ட 99 குழந்தைகளில், சவுமியா மற்றும் மீனாவை தவிர மற்றவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்கள் குடும்ப உறவினர்களுடன் இணைந்துள்ளனர். ஆனால், மீனா மற்றும் சவுமியாவை தேடி யாரும் வரவில்லை.

"எதற்கும் கவலைப்பட வேண்டாம் என அவர்கள் இருவரிடமும் கூறியுள்ளேன். படிப்பில் முழுக்கவனம் செலுத்த சொல்லியிருக்கிறேன்" என கூறும் ராதாகிருஷ்ணன், இருவரது வாழ்க்கையிலும் அனைத்து படிநிலைகளிலும் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x