Published : 08 Dec 2018 10:18 AM
Last Updated : 08 Dec 2018 10:18 AM

தள்ளுவண்டி வடை கடை நடத்தும் பொறியியல் பட்டதாரி: அக்காவின் வளர்த்த பாசத்துக்கு தம்பி காட்டும் ‘விசுவாசம்’ 

பெற்ற பிள்ளைகளே பெற் றோரைக் கைவிடும் இந்தக் காலத்தில் வளர்த்த பாசத்துக்காக, அக்காவுக்காக, தான் பார்த்த வேலையை உதறிவிட்டு, அவர் நடத்தி வந்த தள்ளுவண்டி வடை கடையை கவுரவம் பார்க்காமல் நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி.

மதுரை காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகாந்த். பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எலக்ட்ரிக் கல் கம்யூனிகேசன் படித்துள்ளார். விஜயகாந்த் 8-ம் வகுப்பு படிக்கும்போது தந்தை மோகனும், 10-ம் வகுப்பு படிக்கும்போது தாய் சாந்தாவும் இறந்துவிட்டனர். இவருக்கு மூன்று அக்கா, ஓர் அண்ணன். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா?, தொடர்ந்து படிப்பைத் தொடரமுடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் கடைக்குட்டியான விஜயகாந்த் தவித்தார். ஆனால், இரண்டாவது அக்கா சூர்யா தனது 2 குழந்தைகளுடன் சேர்த்து இவரையும் வளர்க்க ஆரம்பித்தார்.

அக்கா கணவர் போலீஸ்காரராக இருந்தாலும், அவரது வருமானம், கடனை அடைக்கவும், அன்றாடப் பிழைப்புக்குமே சரியாக இருந் தது. ஆனாலும், தம்பியை எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்து, ஆசைப்பட்டதுபோல, பொறியியல் படிக்க வைத்தார். அதற்கு அவர் நடத்தி வந்த தள்ளுவண்டி வடைக் கடைதான் கை கொடுத்தது.

பொறியியல் படித்து முடித்த கையோடு விஜயகாந்த், ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்கும் சேர்ந்தார். இந்நிலையில் அவரது அக்காவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவரது குழந்தைகள் இன்னும் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டவில்லை.

வியாபாரத்தைப் பொருத்த வரை, வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது மிக முக்கியம். இல்லாவிட்டால் அவர்கள் வேறு இடத்துக்குச் சென்று விடுவார்கள் அல்லது அந்த இடத்தில் வேறு யாரேனும் கடையைப் போட்டு விடுவார்கள். அதனால், விஜய காந்த், தான்பார்த்து வந்த பொறி யாளர் வேலையை உதறிவிட்டு தன்னை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்கிய அக்காவின் குடும் பத்தைக் காப்பாற்றத் தயாரானார்.

அக்கா நடத்தி வந்த தள்ளுவண்டிக் கடையை எடுத்து நடத்த ஆரம்பித்தார். வாடிக்கை யாளர்களைக் கவர தினமும் புதுப்புது கைப்பக்குவத்தைக் கையாண்டு கடந்த ஓராண்டில் வடை கடை வியாபாரத்தில் அக்காவையே மிஞ்சிவிட்டார்.

விஜயகாந்த் நம்மிடம் பேசிய போது, அக்காவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியல, அவர் எனக் காக 6 மாதங்களுக்கு கடை யைப் பார்த்துக்க முடியுமான்னு கேட்டாங்க.

என்னை வளர்த்து ஆளாக்கின அக்காவுக்கு ஒரு கை கொடுத்த மாதிரி இருக்கும்ன்னு இந்தக் கடையை எடுத்து நடத்துறேன். ஆரம்பத்துல வடை சுட வரல. அக்கா வடை சுடும்போது பார்த்ததுதான். ஒரு நாள்கூட நான் வடை சுட்டதில்லை.

அவங்களுக்கு முடியலன்னும்போது, நான் அந்த இடத்துல வடை சுட்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை. கொஞ்சம், கொஞ்சமாக சரி செய்து, இப்போது நல்லா வடை சுட ஆரம்பிச்சுட்டேன். வடையுடன் தற்போது பனியாரமும் சுடுகிறேன். நாளொன்றுக்கு ரூ.1,500 வரை வருமானம் கிடைக்கும். இதில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் 800 ரூபாய் வரை கையில் நிற்கும்.

இன்னும் ஓரிரு மாதத்தில் உடல்நிலை சரியாகி அக்கா வந்துடுவாங்க. திரும்பி வந்த பிறகு கடையை அவங்ககிட்ட ஒப்படைச்சிட்டு, என்னோட பொறியியல் வேலையைப் பார்க் கப் போயிருவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x