Last Updated : 17 Dec, 2018 09:46 AM

 

Published : 17 Dec 2018 09:46 AM
Last Updated : 17 Dec 2018 09:46 AM

மதுராந்தகம் நகராட்சியில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: பாதாள சாக்கடை  திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

மதுராந்தகம் நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டம் தாமதமாகி வருவதால், குடியிருப்பு பகுதிகளில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதைத் தொடர்ந்து, திட்டத்தை நிறைவேற்ற நகராட்சி மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1974-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்ட மதுராந்தகம் தற்போது, சுமார் 20.46 சதுர கி.மீ. பரப்பளவுடன் 24 வார்டுகளை உள்ளடக்கி இரண்டாம் நிலை நகராட்சியாக விளங்கி வருகிறது. நகரப்பகுதியில் மட்டும் மக்கள் தொகை 40 ஆயிரமாக உள்ளது. நகரப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான பாதாள சாக்கடை திட்டம் 40 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், குடியிருப்புகளின் நடுவே உள்ள பல்வேறு தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் வாசுதேவன் கூறியதாவது: மதுராந்தகம் நகரின் பல்வேறு பகுதி யிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், அப்துல்கலாம் நகர், சூரக் கோட்டை கிராமம், காந்தி நகர் மற்றும் கடப்பேரி ஆகிய பகுதிகளில் தேங்கி நிற்கின்றன. குடியிருப்பு கள் மற்றும் வணிக நிறுவனங்களி லிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், வீடுகள் நிறைந்த தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் வழிந் தோடுகிறது. இதனால், சுகாதாரச் சீர் கேட்டுடன், கொசு உற்பத்தியும் அதி கரித்து டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.

மதுராந்தகம் நகர திமுக நிர்வாகி கள் சிலர் கூறியதாவது: மதுராந்த கம் பாதாள சாக்கடை திட்டத்திற் காக, கடந்த 2010-ம் ஆண்டு ரூ.12 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும், நகராட்சி யின் பங்களிப்பு தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதும் அத்தொகையும் செலுத்தப்பட்டது. பின்னர், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மாம்பாக்கம், கருங்குழி பகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், ஆண்டு கள் பல கடந்தும் அரசிடமிருந்து எந்தவிதமான அறிவிப்புகளும் வரவில்லை என்றனர்.

இதுகுறித்து, நகரப்பகுதி வாசி கள் கூறியதாவது: அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பாதாள சாக் கடை திட்டம் தாமதப்படுத்தப் படுகிறது. உள்ளாட்சி தேர்தலும் நடைபெறாததால் அதிகாரிகளும் மெத்தனமாக உள்ளனர் என்றனர்.

இதுகுறித்து, மதுராந்தகம் நக ராட்சியின் ஆணையர் (பொறுப்பு) மாரிச்செல்வியிடம் கேட்டபோது: இத்திட்டம் தொடர்பாக அறி விப்புகள் ஏதும் வரவில்லை. பழைய நிலையே தொடர்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x