Published : 28 Dec 2018 07:03 PM
Last Updated : 28 Dec 2018 07:03 PM

பாலியல் பலாத்கார வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் முதல் தீர்ப்பை அளித்துள்ளது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர் ராஜ்குமார் (52).  கடந்த 2006 முதல் 2011 வரை  திமுக எம்.எல்.ஏவாக இருந்தார். இவர் வீட்டு வேலைக்காக கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் 15 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தினார்.

குழந்தைத்தொழிலாளர் சட்டத்தை மீறி பெற்றோரின் வறுமையை காரணமாக வைத்து 15 வயது சிறுமியை வீட்டுக்கு வேலைக்காக அமர்த்தினார். சிறுமி வேலைக்கு சேர்ந்த ஒரு சில நாட்களில் தனது தாயாரை போனில் தொடர்பு கொண்ட அந்த சிறுமி, தன்னால் இங்கு இருக்க முடியவில்லை என்றும், உடனே அழைத்து செல்லும்படியும் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து மகளை அழைத்து செல்வதற்காக சிறுமியின் பெற்றோர் கேரளாவில் இருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்த போது, ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர் சிறுமியின் தாயாரை போனில் தொடர்பு கொண்டு சிறுமி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெரம்பலூர் வந்த சிறுமியின் தாயார், மருத்துவமனையில் மகளை பார்த்தபோது அவரது மகள் சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். அவருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாத நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர்  மீது ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு பெரம்பலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது பன்னீர்செல்வம் இறந்து போனார்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு எதிராக காவல்துறை  குறிப்பிட்ட பாலியல் பலாத்காரம், மரணத்திற்கு காரணமாக இருத்தல், கூட்டுச் சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார்.

ராஜ்குமாரின் கூட்டாளி ஜெய்சங்கர் எதிராக கூட்டுச் சதி, மோசடி ஆகிய பிரிவுகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாகவும்,  இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் இறந்துபோன ஒருவரை தவிர மற்றவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை காவல் துறை தரப்பில் நிரூபிக்க வில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x