Published : 01 Dec 2018 10:43 AM
Last Updated : 01 Dec 2018 10:43 AM

‘சிம்மக் குரலோன் 90’ நெகிழ்ச்சி திருவிழா: நடிகர் திலகம் சிவாஜிக்கு திரைப் பிரபலங்கள் திரண்டு புகழாரம்

‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாள் நினைவாக நடைபெற்ற ‘சிம்மக் குரலோன் 90’ நெகிழ்ச்சி திருவிழாவில் திரைப் பிரபலங்கள் திரண்டு, சிவாஜிக்கு புகழாரம் சூட்டினர்.

சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ‘சிம்மக் குரலோன் 90’ எனத் தலைப்பிட்டு கடந்த பல வாரங்களாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் சிவாஜிக்கு சிறப்புப் பக்கங்களை வெளியிட்டு, வாசகர்களுக்கு பரிசுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்தக் கொண்டாட்டத்தின் உச்சமாக, ‘சிம்மக் குரலோன் 90’ நெகிழ்ச்சி திருவிழா சென்னை வாணி மகாலில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் பல்வேறு நடிப்புப் பரிமாணங்களை புலப்படுத்திக் காட்டும் என். டி ஃபேன்ஸ் சங்கம் சார்பில் ராகவேந்திரன் மற்றும் முரளி சீனிவாஸ் தொகுத்து வழங்கிய 70 நிமிடங்களைக் கொண்ட காணொலி திரையிடப்பட்டது. அதில் சிவாஜி கணேசன் நடித்த 24 திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.  அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி யில் பங்கேற்ற கலைஞர்கள் பேசியதாவது:

குமாரி சச்சு:

படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் ஒவ்வொருவருக்கும் சிவாஜி நடிப்பு நுணுக்கங்களை கற்றுத் தருவார். என்னுடன் பிறந்தவர்களை கூட நான் பெயர் சொல்லிதான் அழைப்பேன். ஆனால் சிவாஜி கணேசன் அவர்களை ‘அண்ணா’ என்றுதான் அழைப்பேன். நான் திரையுலகில் இருந்த அந்தக் காலம் பொற்காலம். அதை நான் செய்த புண்ணியமாக கருதுகிறேன்.

‘ஊர்வசி’ சாரதா:

சிவாஜி கணேசனுடன் படத்தில் நடிக்கும்போது எனக்கு பயமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் எனக்கு தைரியம் கொடுத்தவர் சிவாஜி கணேசன். அவரோடு பழங்கிய காலங்களை நினைக்கும்போது இன்றும் பிரமிப்பாக உள்ளது.

வெண்ணிற ஆடை நிர்மலா:

எனக்கு நடிப்பு கற்றுத் தந்தவர் சிவாஜி கணேசன். நான் தமிழில் அழகாக, வார்த்தை சுத்தமாக பேசுவதற்கு அவர் தான் காரணம். நடிகர்களாக வர விரும்புவோர் ஒவ்வொருவரும், சிவாஜி கணேசனின் வசனங்களை பேசித்தான் திரைத்துறைக்கு வருகின்றனர்.

‘சித்ராலயா’ கோபு:

இந்தியா- பாகிஸ்தான் போரில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர இரவு நிகழ்ச்சியை நடிகர்கள் நடத்தினர். அதற்காக நான் கதை, வசனம் எழுதிய நாடகத்தின் பெயர் தான் ‘கலாட்டா கல்யாணம்’. அதை சிவாஜி கணேசன் திரைப்படமாக எடுத்தார். அது நான் திரை

உலகில் நிலைத்து நிற்க காரணமாக இருந்தது. எனது திறமையை பாராட்டி, அவர் வழங்கிய விருதை, திரை உலகில் பெரிய கவுரவமாக கருதப்படும் ஆஸ்கார் விருதாக கருதுகிறேன்.

எஸ்.பி.முத்துராமன்:

சிவாஜி கணேசனின் படங்கள் ஒரு கடல். அதில் முக்கிய காட்சிகளை தேர்வு செய்து, அந்த காட்சிகளையும், அவர் தொடர்பான தகவல்களையும் தொகுத்து வழங்கிய ‘தி இந்து’ குழும குழுவினருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிவாஜி அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்துவிட்டார். அவர் நடிக்காத பாத்திரமே இல்லை.

ராம்குமார்:

சிவாஜி கணேசனின் பிறவி தெய்வப்பிறவி. நான் அவரது மகன் இல்லை. அவரது ரசிகன் நான். ‘தி இந்து’ குழும நாளிதழ்கள் முதல் தரமானவை. அந்நிறுவனமே சிவாஜி கணேசனை ஏற்றுக்கொண்டு, அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

நாங்களும் சிவாஜி கணேசனின் பல நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். எங்களை விட ‘தி இந்து’ குழுமம் சிறப்பாக நடத்தியுள்ளது.

பிரபு:

‘தி இந்து’ குழுமத்தில் எப்போதும் தனித்தன்மையும், உண்மையும் இருக்கும். அதை போன்றே, அவர்கள் நடத்தும் சிவாஜி கணேசன் பிறந்தநாளும் தனித்துவமும், உண்மையும் கொண்டுள்ளது. இக்குழுமம் சிவாஜி கணேசன் மீது எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறது என்பதை, இந்த விழா காட்டு

கிறது. 1959-ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அத்திட்டத்துக்காக ரூ.1 லட்சத்தை நன்கொடையாக முதல்வர் காமராஜரிடம் சிவாஜி கணேசன் வழங்கினார். அப்போது மதிய உணவு திட்டத்துக்கு சிவாஜி கணேசன் பெயரை வைக்க காமராஜர் நினைத்திருந்தார் என்ற செய்தியை வெளியிட்ட ஒரே பத்திரிகை ‘தி இந்து’ நாளிதழ் மட்டுமே.

நிகழ்ச்சியில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தேர்ந்தெடுத்திருந்த 10 திரைப்படங்களின் காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும், ‘தி இந்து’ குழுமத்துக்கும் சிவாஜிக்கும் இடையிலான நீண்டகாலத் தொடர்ச்சியை விளக்கும் வகையில்‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தி இந்து கண்ட

சிவாஜி சாம்ராஜ்ஜியம்’ என்ற சிறப்பு காணொலியும் திரையிடப்பட்டது.

சிவாஜி கணேசன் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘இந்து டாக்கீஸ்’ இணைப்பிதழில் ‘சிம்மக் குரலோன் 90’ என்ற தலைப்பில் இரு போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் போட்டியில் சிவாஜி கவுரவ தோற்றங்களில் நடித்த 7 திரைப்படங்களில், அவை வெளியான ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற்றோருக்கு சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் பரிசு வழங்கினார்.  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரா தனக்கு பிடித்த, சிவாஜி நடித்த 10 படங்களின் பட்டியலை நமக்கு அளித்திருந்தார். அவர் தந்த வரிசையை கலைத்து வெளியிட்டோம். ஒய்.ஜி.மகேந்திரா கொடுத்த வரிசையை ஊகிக்க வேண்டும் என்ற போட்டிநடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றோருக்கு சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி களை ‘தி இந்து’வின் வி.பாலசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார்.

‘தி இந்து’ குழும இயக்குநர்கள் விஜயா அருண், லட்சுமி ஸ்ரீநாத், ‘இந்து தமிழ்’ ஆசிரியர் கே.அசோகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x