Published : 20 Dec 2018 12:20 PM
Last Updated : 20 Dec 2018 12:20 PM
விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையை செஞ்சி கோட்டை வழியாக அனுமதிக்க முடியாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை சார்பில் ஒரே கல்லால் ஆன 64 அடி உயரம், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் வடிவமைக்கப்பட்டு 240 டயர்கள் கொண்ட பிரத்யேக கார்கோ லாரி மூலம் கடந்த 1-ம் தேதி அக்கிராமத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 13-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டை வந்தது.
14-ம் தேதி காலை புறப்பட்டு இரவு சிறுவளூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டது. 15-ம் தேதி இரவு தீவனூர் கிராமம் வந்தடைந்தது. அங்கிருந்து கர்நாடகா மாநிலம் வி.ஆர்.புரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் அனுமதி பெற்று நேற்று முன் தினம் செஞ்சி சங்கராபரணி அருகே வந்தடைந்தது.
அங்கிருந்து மேல்களவாய் தரைப்பாலம் வழியாக செஞ்சி நகருக்குள் நுழைந்து திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல முடிவெடுக்கப்பட்டது. செஞ்சி கோட்டை சுற்று சுவருக்கு இடையே செல்லும் சாலை குறுகியதாக உள்ளது. இந்த வழியே அனுமதிக்க முடியாது என்று தொல்லியல் துறையினர் செஞ்சி டிஎஸ்பி மற்றும் வருவாய் துறைக்கும் முறைப்படி கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தொல்லியல் துறையினர் அனுமதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். சாலையின் அகலமும், வாகனத்தின் அகலமும் ஒன்றாக உள்ளது. வாகனம் உள்ளே நுழையும்போது கோட்டை சுற்றுச்சுவர் சேதம் அடைய வாய்ப்புண்டு. மாற்று வழி ஏற்பாடு செய்து கொள்ளவும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இதனை சுவாமி சிலையை கொண்டு செல்லும் அறக்கட்டளை நிர்வாகியிடமும் தெரிவித்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT