Published : 12 Dec 2018 10:20 AM
Last Updated : 12 Dec 2018 10:20 AM

பின்னலாடை பயன்பாட்டுக்கான ‘பாலிபேக்’ தடை நீக்கம்: அரசுக்கு நன்றி தெரிவிக்கும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்

திருப்பூர் பின்னலாடை பயன்பாட்டில் முக்கியப் பங்காற்றி வரும் பாலிபேக்குகளுக்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அதன் உற்பத்தியாளர்கள் வெகுவாக வரவேற்கின்றனர்.

ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் திருப்பூர் பின்னலாடைத் துறையில் உற்பத்தி மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக அனுப்ப பாலிபேக்குகளின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

இந்நிலையில், வரும் ஜன. 1-ம் தேதி முதல் பாலித்தின் பொருட்களுக்கான தடையை தமிழக அரசு அமல்படுத்த முடிவெடுத்தது. இதற்கான அரசாணை கடந்த ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இது திருப்பூர் பின்னலாடைத் துறையை நம்பி, பாலிபேக் உற்பத்தியை சார்ந்துள்ள 175 பாலிபேக் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்துள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை கவலை அடையச் செய்தது. ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள பின்னலாடைத் துறையினரையும் கவலை அடைய வைத்தது.

பின்னலாடைக்கு அத்தியாவசியம்

திருப்பூர் பாலிபேக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.சண்முகம் கூறியதாவது: ”பின்னலாடைத் தொழிலுக்கு 100 சதவீதம் அத்தியாவசி தேவயான மூலப்பொருளாக பாலிபேக் உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடை பொருளை பாதுகாக்க, குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் பாலிபேக்குகள் உதவுகின்றன. பாலிபுரப்பலின் (PP), பாலி எத்திலின்(LD), ஹைடென்சிட்டி (HD) என மூன்று வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடைத் துறையை பொறுத்தவரை ஃபேப்ரிகேஷன், டையிங், காம்ஃபாக்டிங், லோக்கல் கார்மென்ட்ஸ் மற்றும் ஏற்றுமதி என அனைத்து நிலைகளிலும் பாலிபேக்குகளின் பயன்பாடு பின்னலாடைத் துறையில் உண்டு. துணியின் மீது தூசி படிவது தொடங்கி வெயிலில் துணியின் தன்மை மாறுவது என அனைத்தையும் இது தடுக்கிறது. துணியை விற்பது தொடங்கி ஏற்றுமதி வரை, அனைத்து நிலைகளிலும் முக்கிய பங்களிப்பில் உள்ளது பாலிபேக்குகள். ஒரு பனியனை மட்டும் பேக்கிங் செய்வதை சிங்கிள் பாலிபேக் என்றும், அதையே 10 பனியன் கொண்ட பண்டலை பேக்கிங் செய்வதை மாஸ்டர் பாலிபேக் என்கிறோம்.

இப்படி அத்தியாவசியத் தேவையாக உள்ள பின்னலாடை பாலிபேக்கை ’பிரைமரி பேக்கேஜிங்’காக வைத்து விலக்கு அளிக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். நாங்கள் தொடர்ச்சியாக எழுப்பியகோரிக்கையைத் தொடர்ந்து, உணவுப்பொருள் பேக்கேஜிங் போல் பிரைமரி பேக்கேஜிங் என முக்கியத்துவம் அளித்து, பின்னலாடை பாலிபேக்கை அரசு அனுமதித்துள்ளதை வரவேற்கிறோம்” என்றார்.

முறைகேடான தொழிற்சாலைகள் :

பாலித்தின் பேக் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கே.எஸ்.லோகநாதன் கூறியதாவது:

பின்னலாடை தொழிலுக்கான பாலிபேக்குகளுக்கு திருப்பூரில் ஆண்டுக்கு சுமார் ரூ. 500 கோடி வர்த்தகம் செய்து வருகிறோம். பின்னலாடை உற்பத்தியில் பெரும் தூணாக பாலிபேக்குகள் இருப்பதால், அவற்றுக்கு அரசு தடை நீக்கி விலக்கு அளித்திருப்பதற்கு நன்றி. நாங்கள் பின்னலாடைக்காக உற்பத்தி செய்யும் பாலிபேக்குகள் அனைத்தும் மறுசுழற்சி செய்யக்கூடியவை. சிலர் முறைகேடாக உற்பத்தி நிறுவனங்களை வைத்துக்கொண்டு, உணவகங்களில் சட்னி, சாம்பார் கட்ட பயன்படுத்தப்படும் பாலித்தின் பையை தயாரிக்கிறார்கள். இவைதான் அழிக்க முடியாத பாலித்தின் குப்பையாக மாறுகிறது. முறைகேடாக இயங்கும் பாலிபேக் உற்பத்தி தொழிற்சாலைகள் மீது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் கூறியதாவது: பின்னலாடைத் துறைக்கு ’பிரைமரி பேக்கேஜிங்’ ஆக பாலிபேக் இருப்பதால், தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கமும் தற்போது அளிக்கப் பட்டுள்ளது. பின்னலாடை பாலிபேக், உற்பத்தியையும், பின்னலாடைத் தொழிலையும் பாதிக்காது. ஒருமுறை மட்டும் தூக்கி எறியக்கூடிய பாலித்தின் பொருட்களான பாலித்தினால் செய்யப் பட்ட விரிப்புகள், தூக்குபைகள், தட்டு கள், தண்ணீர் பாக்கெட்டுகள், டம்ளர், கொடிகள், உறிஞ்சி குழல்கள்(Straws) ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. தொழில்துறையினரும் முறையாக மறுசுழற்சிக்கு பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைகேடாக இயங்கும் பாலித்தின் உற்பத்தி தொழிற்சாலை குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x