Published : 23 Dec 2018 08:06 AM
Last Updated : 23 Dec 2018 08:06 AM
தமிழ் இசைச் சங்கத்தின் 76-ம் ஆண்டு இசைவிழா நேற்றுமுன் தினம் தொடங்கியது. இசை விழாவை தொடங்கி வைத்து உரை யாற்றிய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இசை என்பது பண் பாட்டின் அடையாளம் என்றும் கலைஞர்கள் நிறைய தமிழ் பாடல் கள் பாடவேண்டும் என்றார்.
தமிழ் இசைச் சங்கத்தின் 76-ம் ஆண்டு இசைவிழா நேற்று முன் தினம் சென்னை ராஜா அண்ணா மலை மன்றத்தில் தொடங்கி யது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் விழா வுக்கு தலைமை ஏற்று, பிரபல மிருதங்க வித்வான் டாக்டர் உமை யாள்புரம் கே.சிவராமனுக்கு ‘இசைப் பேரறிஞர்’ விருதும், பழநி க.வெங்கடேசனுக்கு ‘பண் இசைப் பேரறிஞர்’ விருதும் வழங்கி சிறப் பித்தார். விருது பெறுபவர்களுக்கு, வெள்ளிப்பேழை, பொற்பதக்கம் மற்றும் (தலா) ரூ.10,000 வழங்கி கவுரவித்தார்.
விழாவின் தொடக்கத்தில் முனை வர் தேவகி முத்தையா குத்து விளக்கேற்றினார். தமிழ் இசைச் சங்கத் தலைவர் நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, “தூங்கிக் கிடந்த தமிழ் இசையை தட்டி எழுப்பியவர் செட்டிநாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். அவரைத் தொடர்ந்து, அவர்கள் குடும்பத்தினர் தமிழ் இசையை காத்து வருகின்றனர். தமிழ் இசைக் கல்லூரியில் காலை நேர, மாலை நேர வகுப்புகள் நடைபெறுகின்றன” என்றார்.
உமையாள்புரம் கே.சிவ ராமன் தனது ஏற்புரையில், “நாங்கள் அந்தக் காலத்தில் குருகுலவாசம் செய்தோம். ஆனால், இப்போது தகவல் தொடர்பு, தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக கற்றலின் பாதை எளிமையாக உள்ளது. இணையதளம் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன. என்றுமே நான் ஒரு மாணவன்தான். தன்னடக்கம், குருபக்தி, கற்கும் ஆர்வம் இருந் தால் அனைவரும் கலைவானில் சிறந்த நட்சத்திரமாக மிளிரலாம். தமிழ் இசைச் சங்கத்தின் பணி அளப்பரியது” என்றார்.
பழநி க.வெங்கடேசன் தனது ஏற்புரையில், “ஓதுவாமூர்த்தி களுக்கு சிறப்பு செய்து, அவர் களைக் காத்து அருள்வது தமிழ் இசைச் சங்கம் என்று கூறினால் மிகையாகாது” என்றார்.
தலைமை உரையாற்றிய இல.கணேசன் கூறியதாவது:
பொதுவாக வயதானால் விரல்கள் நடுங்கும். ஆனால் உமை யாள்புரம் சிவராமனுக்கு விரல்கள் விளையாடுகின்றன. வெளிநாட் டில் இசை என்பது ஒரு பொழுது போக்கு அம்சம். ஆனால் இந்திய நாட்டில் இசை என்பது பண்பாட்டின் அடையாளம்.
சிவபெருமானின் உடுக்கையின் ஒருபுறத்தில் இருந்து தமிழ் தோன்றியதாகவும், மறுபுறத்தில் இருந்து சமஸ்கிருதம் தோன்றிய தாகவும் கூறுவர். அதனால் மொழிக்கு முன்னர் புல்லாங்குழல், உடுக்கை, யாழ் போன்ற மூங்கில், தோல், நரம்பு இசைக் கருவிகள் தோன்றியிருக்கவேண்டும்.
தமிழ் இசையை வளர்த்தவர்கள் சைவர் மற்றும் வைணவர்கள். பழநி க.வெங்கடேசன் பல நாடு களுக்குச் சென்று எண்ணற்ற மாணவர்களுக்கு பண்ணிசைப் பயிற்சி அளிப்பது மகிழ்ச்சி அளிக் கிறது. அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின் பதிகங்கள் போற்றப்பட வேண்டும்.
மாரிமுத்தா பிள்ளை, முத்துத் தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் போன்றோர் தமிழ் இசை வளர்த்தவர்கள். அவர்களைத் தொடர்ந்து பாரதியார், கோபால கிருஷ்ண பாரதி, பெரியசாமி தூரன், பாபநாசம் சிவன் போன்றோர் தமிழ் இசைக்கு அரும்பணி ஆற்றி யுள்ளனர். கலைஞர்கள் நிறைய தமிழ் பாடல்களைப் பாடவேண்டும். தமிழ் இசை போற்றப்பட வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ் இசைச் சங்கத்தின் மதிப் பியல் செயலர் ஏ.சி. முத்தையா நன்றியுரை வழங்கினார்.
தொடக்க விழாவுக்கு முன்னர் திருவிசைநல்லூர் டி.பி.ஜே. செல்வ ரத்தினம் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், பின்னர் இசைப் பேரறிஞர் டாக்டர் சீர்காழி ஜி.சிவ சிதம்பரம் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT