Published : 20 Dec 2018 11:38 AM
Last Updated : 20 Dec 2018 11:38 AM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பிரதமராக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், தமிழகத்தில் மட்டும் நன்மை விளைந்து, மற்ற மாநிலங்களில் அதிக தீமை விளைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
சென்னையில் கடந்த டிசம்பர் 16 அன்று நடைபெற்ற திமுக விழாவின்போது, மேடையில் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அமர்ந்திருந்தனர். இதில் பேசிய ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிவதாக தம் விருப்பத்தை வெளியிட்டார்.
இது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் மறுநாள், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் ஸ்டாலின் கருத்து மீது அதிருப்தியைத் தெரிவித்தனர்.
இதுபோல், எதிர்க்கட்சியினரிடம் கிளம்பிய எதிர்ப்பு கருத்திற்குப் பின், ஸ்டாலின் தரப்பில் இருந்து நேற்று ஒரு திறந்த மடல் எழுதி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அதன் பிறகும் எதிர்க்கட்சிகள் மனநிலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஏனெனில், பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற குரல் வலுக்கிறதே தவிர, அதன் பிரதமர் வேட்பாளராக இருப்பது யார்? என யாருமே பேசவில்லை. ராகுல், பிரதமர் வேட்பாளராக வேண்டும் என எதிர்க்கட்சிகளில் முதல் தலைவராக ஸ்டாலின் மட்டுமே தற்போது பேசியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையத் தொடங்கிய போதே பத்திரிகைகளில் எழுந்த சர்ச்சைக்கு ராகுல் காந்தியே ஒருமுறை முன்வந்து முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அதில் அவர் தமக்கு பிரதமராகும் விருப்பம் கிடையாது எனவும், வெற்றிக்குப் பின் அப்பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.
இரண்டு கோணங்கள்
எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் கருத்தை காங்கிரஸ் தலைமை இரண்டு கோணங்களில் பார்க்கிறது. அதன் விளைவாக ஒன்று தமிழகத்தின் உள்ளே என்றும், மற்றொன்று அம்மாநிலத்திற்கு வெளியே எனவும் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உற்சாகம்
தமிழகத்தைப் பொறுத்தவரை ஸ்டாலின் கூறிய கருத்து திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் மற்ற சில எதிர்க்கட்சித் தலைவர்களும் இதை வரவேற்றுள்ளனர்.
காங்கிரஸாரின் அதிருப்தி
2013-ல் இலங்கை பிரச்சினையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது. இதனால், மக்களவைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டன. இதில் இருவருக்கும் ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்காதமையால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு திமுகவினர் மீது அதிருப்தி உருவானது.
திமுகவினர் மனக்கசப்பு
2016-ல் வந்த சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் இணைந்த கூட்டணியில் குறைந்த தொகுதிகளில் வெற்றி கிடைத்தன. இதில், காங்கிரஸாரின் ஒத்துழைப்பில்லாமல் போனதால் வந்த தோல்வி என திமுகவிடம் மனக்கசப்பு கிளம்பியது. இதன் காரணமாக 2019-ல் இந்த கூட்டணி தொடருமா எனவும் கேள்வி எழுந்திருந்தது.
திமுகவிற்கு விட்டுக் கொடுக்கும் காங்கிரஸ்
இதற்கான விடை, ஸ்டாலினின் தற்போதைய அறிவிப்பால் கிடைத்துள்ளது. இதனால், இருகட்சியினரும் 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிக்காக ஒன்றிணைந்து உழைக்கத் தயாராகி விட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுலும் திமுகவிற்கு வேண்டிய தொகுதிகளை விட்டுக்கொடுத்து தொகுதிப் பங்கீடு செய்யத் தயாராகி விட்டார்.
பலன் தராத கருத்து
இதன் பின்னணியில் திமுகவிற்கு விட்டுக் கொடுக்கப்படும் தொகுதிகள் தம் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பவையே என ராகுலுக்கு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எடுத்துரைத்தது காரணம். இதுபோல், தமிழகத்திற்கு உதவிய ஸ்டாலின் கருத்து அதற்கு வெளியே எந்தப் பலனையும் தரவில்லை. மாறாக தீமைகளை விளைவிக்கும் சூழலை ஏற்படுத்தி விட்டது.
பலம் காட்ட கிடைத்த வாய்ப்பு இழப்பு
தம் ஆதரவுடன் கர்நாடகாவின் முதல்வராக எச்.டி.குமாரசாமி பதவியேற்ற போது மாயாவதி, மம்தா உள்ளிட்ட சுமார் 25 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் சோனியாவுடன் கைகோத்துக் கூடியிருந்தனர். இதே பலத்தை தம் மூன்று மாநில முதல்வர்களின் பதவியேற்பு விழாவில் காட்டி அரசியல் லாபம்பெறும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது.
அனைவருக்கும் பிரதமர் ஆசை
இதன் பின்னணியில் ஸ்டாலின் கூறிய கருத்து காரணமாகி விட்டது. தமிழகத்திற்கு வெளியே உள்ள மாநிலங்களின் பல தலைவர்கள் தாமும் பிரதமராகும் ஆசையை வளர்த்து வைத்துள்ளனர். அவர்கள் தற்போது ஸ்டாலின் கருத்து மீதான கோபத்தை காங்கிரஸிடம் காட்டி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளுக்கு வழிவகுத்த ஸ்டாலின்
இவ்வாறு எதிர்க்கட்சிகள், ராகுல் பிரதமர் வேட்பாளர் என்பதை தாமாக முன்வந்து விமர்சிக்க, ஸ்டாலின் வழிவகுத்துக் கொடுத்துள்ளார். இதன் மற்றொரு விளைவு வாக்காளர்களிடம் ஏற்படும் என்ற அச்சமும் காங்கிரஸ் தலைமையிடம் உருவாகி உள்ளது.
கிச்சடி கூட்டணி
அதில் பொதுமக்கள், ‘ராகுல் பிரதமராக ஸ்டாலின் கூறிய விருப்பத்தை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. தானே முதல்வராக விரும்பும் பலர் வெற்றிக்குப் பின் 1996-ல் அமைந்த அரசின் கிச்சடி கூட்டணியை உருவாக்க முயல்கிறார்கள். அதை விட பாஜகவே பரவாயில்லை’ எனக் கருதி விடும் ஆபத்து நிலவுகிறது.
இருவிதமான உணர்வுகள்
பாஜக கூட்டணி வந்தால் குறைந்தபட்சம் நிரந்தர ஆட்சியாவது இருக்கும் என்ற கருத்து பொதுமக்களிடம் உருவாகும். இதனால் தான் ஸ்டாலின் கருத்து காங்கிரஸ் தலைமைக்கு இருவிதமான உணர்வுகளை கொடுத்துள்ளது.
அர்த்தமில்லாத தேசியக் கூட்டணி
மக்களவைத் தேர்தலுக்கானக் கூட்டணி என்பது தேசிய அளவிலான அர்த்தமுள்ளதாக இல்லை எனலாம். இதற்கு குறைந்தது ஐந்து மாநிலங்களிலாவது காங்கிரஸ் வாக்குகள் தம் கூட்டணிகளுக்கும், அதன் வாக்குகள் தமக்கும் என கிடைக்க வேண்டும்.
காங்கிரஸ் வாக்குகள்
இதுபோன்ற நிலை இல்லாமல் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் வாக்குகள் குறிப்பிட்ட மாநிலங்களை தாண்டும் நிலை இல்லை. அதேசமயம், இவர்கள் அனைவருக்கும் அங்கு ஓரளவிற்காவது உள்ள காங்கிரஸ் வாக்குகள் தான் அதன் கூட்டணிகளுக்கு கிடைத்து வருகின்றன.
மாநிலங்களில் மட்டுமே ஆதரவு வாக்குகள்
உதாரணமாக, மக்களவை கூட்டணியில் திமுக தமிழகத்திலும், சந்திரபாபு நாயுடு ஆந்திராவிலும், சரத்பவார் மகாராஷ்டிராவிலும், மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்திலும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் பிஹாரிலும் அகிலேஷ் மற்றும் மாயாவதி உ.பி.யிலும் என அவரவர் மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸுக்கு வாக்குகளைப் பெற்றுத் தர முடியும்.
இடதுசாரிகளின் வாக்குகள்
இடதுசாரிகள் வேண்டுமானால் கேரளா மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்குகள் பெற்றுத் தரலாம். ஆனால், அவை காங்கிரஸின் வெற்றிக்கு உதவுமா என்பது கேள்விக்குறியே.
தீமைகள் அதிகம்
எனவே, ஸ்டாலின் வெளியிட்ட விருப்பம் திமுக மற்றும் தமிழக காங்கிரஸார் இடையே இருந்த அதிருப்திகளைக் களைந்துள்ளது. ஆனால், அதைவிட அதிகமாக தேசிய அளவில் ராகுலுக்கு தீமைகளை விளைவித்துள்ளது என்பது காங்கிரஸின் கருத்தாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT