Published : 11 Dec 2018 09:15 AM
Last Updated : 11 Dec 2018 09:15 AM

மலைகளின் அரசிக்கு மகுடம் சூட்டும் சிகரங்கள்

இன்று சர்வதேச மலைகள் தினம் (டிச.11) கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய மலை மாவட்டமான நீலகிரிக்கு மகுடம் சூட்டும் சிகரங்கள் குறித்து அறியலாம். கோடை வாசஸ்தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டம், 5538 சதுர கிலோ மீட்டர் பரப்பை உள்ளடக்கிய சிறந்த உயிர்ச் சூழல் மண்டலமாகவும் திகழ்கிறது. மலைத்தொடர்களில் அமைந்துள்ளதால் ‘மலையரசி’ எனவும் அழைக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது தொட்டபெட்டா (2634 மீட்டர்) சிகரம். ஆனால், இதைத் தவிர பல சிகரங்கள் வெளியே தெரியாமல் நிமிர்ந்து நிற்கின்றன.

முக்கூர்த்தி

உதகையில் இருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள முக்கூர்த்தி சிகரம் 2554 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு யானை, புலி உட்பட வன விலங்குகள் உள்ளன. ஒவ்வோர் இடத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமான அமைப்புகளோடு தோற்றமளிப்பது, இந்த சிகரத்தின் தனித்துவம். நீலகிரியில் தோன்றும் நீளமான நதி, முக்கூர்த்தியில்தான் உற்பத்தியாகிறது. பைக்காரா ஏரிக்கான நீர், இங்கிருந்துதான் வருகிறது. இந்த சிகரத்தை, தோடர் இன மக்கள் தெய்வீகமாக கருதி வணங்குகின்றனர்.

நீலகிரி சிகரம்

முக்கூர்த்தி தேசிய பூங்காவி லுள்ள இந்த சிகரம், சாதாரணமாக ஏறி சென்றடைய முடியாத வகை யில் அமைந்துள்ளது. இந்த சிகரத்தை தொட்டவர்கள் வெகு சிலரே. 2476 மீட்டர் உயரம் கொண் டது. சோலை மரங்கள், புல்வெளிகளுக்கு உட்பட்ட இடத்திலுள்ள இந்த சிகரத்தில் ரோடாடன்ரன், ஆர்கிட் உள்ளிட்ட அபூர்வ வகை தாவரங்கள் உள்ளன. புலி, நீலகிரி வரையாடு ஆகிய விலங்குகளும் உள்ளன.

நீலகிரி பிப்பட், ஆரஞ்சு பிளை கேச்சர், நீலகிரி திரஷ், நீலகிரி சிரிக்கும் பறவை ஆகிய பறவை கள் அதிகளவில் உள்ளன. குளிர் காலத்தில் இமயமலைப் பகுதியில் இருந்து வரும் இமயமலை உட்காக் பறவை, இந்த மலை சிகரத்தின் அடிப்பகுதியிலுள்ள புல், நீர் நிலை அமைந்துள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

கொலரிபெட்டா

தொட்டபெட்டா சிகரத்தைவிட 5 மீட்டர் உயரம் குறைவாக கொண்ட இந்த சிகரம், அவலாஞ்சி பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நீலகிரி வரையாடு, அணில் வகைகளும், பிளாக்புல்புல், வையிட் ஐ உட்பட பறவைகளும் காணப்படுகின்றன.

ரங்கசாமி சிகரம்

கோத்தகிரியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சோலைகளுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த சிகரத்தின் உயரம் 1786 மீட்டர். புல்வெளிகள், ஆர்கிட் வகை களுடன், காட்டெருமை மற்றும் சிறு விலங்குகளும் உள்ளன. ஆதிவாசி மக்களான இருளர் இனத்தினருக்கு முக்கியமான தெய்வீக ஸ்தலம். சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி உண்டு.

ஊசி மலை

கூடலூர் அருகே உதகை செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த மலையின் உயரம் 1438 மீட்டர். இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி லங்கூர் வகை குரங்குகள் அதிக அளவில் உள்ளன. நீலகிரி சிரிக்கும் பறவை உட்பட பல்வேறு பறவைகளும் காணப்படுகின்றன.

மலைகளின் பாதுகாப்பு

‘சேவ் நீலகிரிஸ்’ அமைப்பின் நிறுவனர் டி.வேணுகோபால் கூறும்போது, ‘ஒரு கோடி மக்கள் மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். மேலும், உலக மக்கள்தொகையில் பாதியளவு மக்கள் நீர், உணவு மற்றும் சுத்தமான காற்றுக்கு மலைகளை நம்பியுள்ளனர். தற்போது காலநிலை மாற்றம், இயற்கை வளங்களை அழித்தல், மாறுபட்ட நிலப் பயன்பாடு காரணங்களால் மலைகள் அழிந்து வருகின்றன.

மலைகளை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, 58 அரசுகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இதில், இந்திய அரசும் இணைந்துள்ளது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மலைகளை பாதுகாக்க இயக்கம் தொடங்கியுள்ளேன். நீலகிரி மலைகளின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் அங்கீகரிப்பதால், மத்திய, மாநில அரசுகளின் கவனம் பெறும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x