Published : 10 Dec 2018 09:24 AM
Last Updated : 10 Dec 2018 09:24 AM
குளத்தில் துள்ளிக் குதிக்கும் மீன்கள்; கருங்கோழி, அசில் என விதவிதமான நாட்டுக் கோழிகள்; குளத்தைச் சுற்றி மேயும் வெள்ளாடுகள்; நாட்டுப் பசு மாடுகள்; தேக்கு, தென்னை, மகாகனி, மலைவேம்பு என மதிப்பு மிக்க மரங்கள்; இவைகளுக்கு மத்தியில் ஒரு கூரை வீடு.
திருவாரூர் மாவட்டம், மன்னார் குடி அருகே உள்ளது மானங்காத் தான் கோட்டகம் என்ற குக்கிராமம். அங்கு கோரையாற்றின் வலது கரையில் அமைந்துள்ள ஒருங்கி ணைந்த இயற்கை வேளாண் பண்ணையில்தான் இவ்வளவு காட்சிகளையும் ஒருசேர காண முடிந்தது. கடந்த நவம்பர் 15-ம் தேதி இரவு வீசிய கஜா புயல், மறுநாள் காலைப்பொழுது புலர் வதற்குள் இந்த பண்ணையை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டது.
சுழன்று வீசிய காற்றில் வீடு கீழே விழுந்துவிட்டது. கோழிகள் இருந்த கூண்டு பிய்த்தெறியப்பட்டது. பெரும்பாலான மரங்கள் சாய்ந்து விட்டன. குளத்தில் குவிந்த தாவரக் கழிவுகள் அழுகிப் போனதால், தண்ணீர் மாசடைந்து மீன்கள் இறந்துவிட்டன.
கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகள் பார்த்துப் பார்த்து பெருக்கிய தனது பண்ணையின் பெரும்பகுதி வளங் கள் ஒரேநாள் இரவில் அழிந்து போன அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார் அதன் உரிமையாளரான எம்.தெய்வமணி.
புயல் வீசிய நள்ளிரவில் மனைவி, 8-ம் வகுப்பு படிக்கும் மகள், 6-ம் வகுப்பு படிக்கும் மகனோடு கூரை வீட்டிலிருந்து வெளியேறி, அருகில் வசிப்பவரின் மாடி வீட்டுக்குள் தஞ்சம் புகுந் துள்ளார் அவர். இருட்டு நேரத்தில் குடும்பத்தோடு உயிர் தப்பிக்கும் நோக்கில் ஓடியபோது, குறுக்கே விழுந்து கிடந்த மரத்தில் மோதி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளி யேறிய சற்று நேரத்தில் அவர்கள் வசித்து வந்த கூரை வீடு கீழே விழுந்துள்ளது.
“சொத்து அழிஞ்சது மட்டு மில்ல. இன்னும் கொஞ்ச நேரம் வீட்டிலேயே இருந்திருந்தா குடும் பமே பெரும் ஆபத்துல சிக்கியிருப் போம்” என்கிறார் தெய்வமணி.
தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல நாலு ஏக்கர்ல நெல்லு சாகுபடி பண்றோம். இன் னும் ஒரு ஏக்கர்ல மீன் குளம், நாட்டுக் கோழி, வெள்ளாடு, நிறைய மரங்களோட ஒருங்கி ணைந்த பண்ணையை உருவாக்கி னோம். மனைவியும், நானும் சேர்ந்து உழைச்சோம். 2011-ம் வருஷத்தி லேர்ந்து கொஞ்ச கொஞ்சமா பண்ணையை நல்ல நிலை மைக்கு வளர்த்து வந்தோம். நீடா மங்கலத்துல இருக்குற கேவிகே (வேளாண் அறிவியல் நிலையம்) அதிகாரிங்க இந்த பண்ணைய மேலும் மேலும் வளப்படுத்தறதுக்கு நிறைய ஆலோசனைகள் சொன் னாங்க.
மன்னார்குடி டவுன்லேர்ந்து எங்க ஊரு ரொம்ப தூரத்துல இருக்கு. இந்த குக்கிராமத்துல இருக்கிற எங்க பண்ணைக்கு திருச்சி அன்பில் தர்மலிங்கம் விவ சாய காலேஜ்லேர்ந்து மாணவர்கள் நிறைய பேரு அடிக்கடி பயிற்சிக் காக வருவாங்க. ஒரு ஏக்கர் நிலத் துக்குள்ள இவ்வளவு வசதிகள் இந்த பண்ணையில இருந்ததால தான் ரொம்ப தூரத்திலேர்ந்து அவங்கெல்லாம் அடிக்கடி வந் துட்டு போனாங்க.
நாலு ஏக்கரு நெல்லு வயலில் கிடைக்காத வருமானம், இந்த ஒரு ஏக்கரு பண்ணையில கிடைக்க ஆரம்பிச்சுது. வாழ்க்கையோட நல்ல நிலைமைய தொடும் நேரம் இது. நிறைய கடன் வாங்கி யிருக்கேன். அந்த கடனயெல்லாம் திருப்பிக் கொடுக்கப் போற நேரத் துல, மொத்த பண்ணையில முக்கா வாசி வளம் அழிஞ்சி போச்சு.
250 நாட்டுக் கோழி வளத்தேன். 200 செத்துப் போச்சு. நாப்பது நாள் வயசுல 250 குஞ்சு இருந்துச்சு. அதுல 100 போச்சு. 20 வெள்ளாட்டுல இப்போ 15-தான் உயிரோட இருக்கு. 60 தென்னமரம், 50 தேக்கு, 30 மலவேம்பு, 100 மகாகனி மரம் எல்லாம் விழுந்து கிடக்கு. குளத்துல மீன் செத்தது மட்டும் நஷ்டமில்ல.
கெட்டுப்போன தண்ணிய முழுசா வெளியேத்தி, குளத்த சரி செய்யவே ஒரு லட்ச ரூபாய்க்கு மேல தேவைப்படும். ஆனா இப்போ என்னோட நிலைமையில கீழே விழுந்த வீட்ட கூட நிமித்த முடியாம தவிக்கிறேன்.
இந்த நேரத்துல, பேங்குல வாங்குன கடனைத் திருப்பிக் கட்ட லன்னு சொல்லி கோர்ட்டுல கேஸ் போட்டுட்டாங்க. என்ன பண்ற துன்னே தெரியல” என்று விரக்தி யோடு பேசுகிறார் தெய்வமணி.
மிக குறுகிய நிலப்பரப்பிலும் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை பண்ணையை அமைத்து, வெற்றிகரமாக நிர் வகிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் தெய்வமணி. அவர் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. இயற்கை பேரிடரால் சாய்க்கப்பட்டுள்ள அவர் மீண்டும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதற்கான ஆதரவு அவருக்கு கிடைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT