Published : 22 Dec 2018 08:44 AM
Last Updated : 22 Dec 2018 08:44 AM
உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளால் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் விருதுநகரில் சாலை மறியல் செய்தனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறிநாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த2015-ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்குத் தடை இல்லை என்று அக்டோபர் 23-ம் தேதி இடைக்காலத் தீர்ப்பு வெளியானது. அக்டோபர் 31-ம்தேதி வெளியான இறுதித் தீர்ப்பில் பட்டாசு ஆலைகளில் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும், சரவெடிகள் தயாரிக்கவும், பேரியம் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் விதிமுறைகளை மீறி பட்டாசு தயாரிக்கும் ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட்டாசு தயாரிக்க முக்கிய வேதிப் பொருளான பேரியத்துக்குத் தடை விதிக்கப்பட்டதாலும், பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன என்ற விளக்கம் இல்லாததாலும் தொடர்ந்து பட்டாசு உற்பத்தியை மேற்கொள்ள முடியாததால் அனைத்துப் பட்டாசு ஆலைகளும் நவம்பர் 12-ம் தேதி முதல் மூடப்பட்டன. இதனால், சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் மட்டுமின்றி உபதொழில் சார்ந்துள்ள தொழிலாளர்களும் வேலையிழந்தனர்.
இந்நிலையில், சிவகாசியில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வேண்டும், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, அனைத்துக் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முனைப்புக் காட்டும்மத்திய அரசு, 8 லட்சம் தொழிலாளர்களைப் பாதுகாக்கப் பட்டாசு ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது, பட்டாசுத் தொழிலைப்பாதுகாக்கவும், தொழிலாளர்களைக் காக்கவும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும். இது குறித்து டெல்லியில் அடுத்த வாரம் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளேன் என்றார்.
இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், பட்டாசுத் தொழிலாளர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில், அனைத்துக் கட்சியினரும், தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன் உட்பட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பலர் ஆட்சியர் அ.சிவஞானத்திடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து பட்டாசு ஆலைகளை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் மதுரை- சாத்தூர் நான்குவழிச் சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து மறியல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT