Published : 12 Aug 2014 12:00 AM
Last Updated : 12 Aug 2014 12:00 AM

தருமபுரி: தோல் பதனிடும் தொழிற்சாலையால் கிராமத்தில் சுகாதார சீர்கேடு

தருமபுரி மதிகோன்பாளையம் பகுதியில் சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்தி வரும் தோல் பதனிடும் தொழிற்சாலை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் உள்ளது மதிகோன்பாளையம். காளியப்பன் தெரு பகுதியில் நீண்ட ஆண்டுகளாக இரண்டு தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்

சாலைகள் பல்வேறு வடிவங்களில் அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக் கேட்டினை ஏற்படுத்தி வருவதாக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்துக்கும் சிலர் சென்றுள்ளனர்.

ஆனாலும் இந்த பிரச்சினை தொடரும் நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ‘தி இந்து’வின் உங்கள் குரல் பகுதியில் தகவல் அளித்து செய்தி வெளியிடும்படி கேட்டிருந்தனர். அதன்படி உண்மை நிலையறிய அப்பகுதிக்குள் நுழைந்தபோது துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதியினர் சிலர் கூறியதாவது:

ஆட்டுத் தோல்களை வாங்கி வந்து அவற்றின் மீது பிரத்தியேக உப்பு உள்ளிட்ட பொருட்களை தூவிவிட்டு அவற்றை ஒன்றன் மீது

ஒன்று அடுக்கி வைத்து விடுகின்றனர். சில நாட்கள் வரை இப்படியே விட்டு, தேவையான பதம் வந்ததும் அந்தத் தோல்களை வெளியூருக்கு அனுப்பி விடுகின்றனர். நீண்ட ஆண்டுகளாக இங்கேயே வசிப்பதால் இந்த நாற்றம் எங்களுக்கு பழகி விட்டது. ஆனால் வீட்டுக்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தால் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

தொடர் துர்நாற்றத்தால் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. யாரிடம் புகார் செய்தாலும் இதற்கு தீர்வே கிடைப்பதில்லை. தோல் பதனிடும் பணியின்போது நறுக்கி எறியப்படும் சிறு சிறு துண்டுகள் கருவாடு போல் காய்ந்து தெருவெங்கும் சிதறி கிடக்கிறது. இதனால் குழந்தைகளை சுதந்திரமாக விளையாடக் கூட அனுமதிக்க முடியவில்லை. மேலும், இந்த துண்டுகளை பறவைகள் தூக்கிச் சென்று மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் போடும் சம்பவங்களும் நடக்கிறது. இதனாலும் சுகாதார பிரச்சினைகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகிறோம்.

கண் துடைப்பு நடவடிக்கைகள்

இதுபற்றி பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நீதிமன்றத்தை அணுகியும் எந்தப் பலனும் இல்லை. மக்கள் ஆத்திரப்படும்போது அதிகாரிகள் சமாதானம் செய்ய தற்காலிக நடவடிக்கைகளை செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கின்றனர். எனவே தொடர்ந்து சுகாதாரமற்ற சூழலிலேயே வாழ்ந்து வருகிறோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை உருவாக்கித் தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுபற்றி தருமபுரி நகராட்சி ஆணையாளர் (பொ) கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று உடனே ஆய்வு செய்கிறோம். குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தவறுகள் இருப்பது தெரிய வந்தால் ஓசூரில் இருந்து செயல்படும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x