Published : 10 Aug 2014 11:16 AM
Last Updated : 10 Aug 2014 11:16 AM
குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு பணிகள் சார்ந்த குறைகளை தெரிவிக்க வருவோரிடம் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகாரிகள் ஏற்படுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரை அற்றும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. இதன் கீழ் சென்னை முழுவதும் 15 பகுதி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் மாதந்தோறும், 2-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்காக திறந்தவெளி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று அனைத்து பகுதி அலுவலகங்களிலும் திறந்தவெளி கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அடையாறு இந்திரா நகரில் உள்ள பகுதி அலுவலகத்தில் நடைபெற்ற திறந்தவெளி கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு சங்க நிர்வா கிகள் பங்கேற்றனர். மேற் பார்வை பொறியாளர் சம்பத் முன்னிலையில், அப்பகுதி பொறியாளர் கு.பாபு பொது மக்களிடம் குறைகளைக் கேட்ட றிந்தார்.
இதைத் தொடர்ந்து புகார் தெரிவிக்க வந்தவர்களை அழைத்துச் சென்ற அதிகாரிகள், அலுவலக வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மாதிரிகளை காண்பித்தனர். மழை நீர் சேகரிப்பு முறைகள், அதற்கான கட்டமைப்பை உருவாக்கும் வழிமுறைகள், ஆழ்துளை கிணறுகளின் அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கினர்.
இது குறித்து பகுதி பொறியாளர் பாபு கூறியதாவது:
மழைநீர் கட்டமைப்பு குறித்து ஊர்வலம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக புகார் தெரிவிக்க வந்தவர்களிடம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து விளக்கினோம்.
தண்டையார்பேட்டை, சவுக் கார்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் போன்ற பகுதிகள் மணற்பாங்கான பகுதிகள். இப்பகுதியில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் நிலத்தடிநீரில் இரும்புத் துகள்கள் கலந்து வருவதால் அவை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
ஆழ்துளை கிணறுகளுக்கு அருகில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு தெளி வான குடிநீர் கிடைக்கும். உப்புநீர் வரும் ஆழ்துளை கிணறுகளுக்கு அருகிலும் இதுபோன்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
குடிநீர் வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்த ரங்கராஜன் என்பவர் இதுபற்றி கூறும்போது, “மழைநீர் கட்டமைப்பை அமைக்க வழிகாட்டுதல்களை தரும் சென்னை குடிநீர் வாரியம், திறனும், அனுபவமும் பெற்ற ஆட்களையும் ஏற்பாடு செய்து அனுப்ப வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT