Published : 28 Nov 2018 10:10 AM
Last Updated : 28 Nov 2018 10:10 AM
மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் வருகையை கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதன் முறையாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேலான மோசடி, நில மோசடி, போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல், ஆன்லைன் மோசடி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து விதமான கனிணி வழிக் குற்றங்கள் தொடர்பாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள்.
இப்புகார்களை விசாரிக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் நேரடி மேற்பார்வையில், காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 2 துணை ஆணையர்கள், 16 உதவி ஆணையர்கள், 42 ஆய்வாளர்கள், 120 உதவி ஆய்வாளர்கள் உட்பட 450-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு பணியில் உள்ளனர். இவர்களில் ஆய்வாளர்கள் வரை ஞாயிறு தவிர தினமும் காலை 8.45 மணிக்கு பணிக்கு வர வேண்டும். இரவு 8 மணிக்கு பணி முடிவடையும். ஆனால், இவர்களில் பலர் பணிக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதன் முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, "மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்காக தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆனால், சம்பந்தப் பட்ட போலீஸார் உரிய நேரத்தில் வராததால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது. மேலும் உணவுப் படியாக மட்டும் தினமும் ரூ.300 வழங்கப்படுகிறது. சில நேரங்கள் தவிர ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுப்பும் அளிக்கப் படுகிறது. ஆனால், உரிய நேரத்தில் பணிக்கு வராமலும், பணி முடிவடையும் முன்னரே செல்வதும் இருந்து வந்ததாக புகார் வந்தது. எனவே, பயோமெட்ரிக் வருகை பதிவேடு அமைக்க முடிவு செய்யப்பட்டது. விரைவில் இது காவல் ஆணையர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT