Published : 21 Nov 2018 06:40 PM
Last Updated : 21 Nov 2018 06:40 PM
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்காததால், 6 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 15) நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் புயலால் 45 பேர் மரணமடைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தன்னார்வலர்கள் பலர் இந்த மாவட்டங்களுக்குச் சென்று உதவிகளைச் செய்து வந்தாலும், அடிப்படைத் தேவையான மின்சார வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் இல்லாததால், குடிநீருக்கே தவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சில இடங்களுக்கு மட்டும் மின்சார வசதி கிடைத்துள்ள நிலையில், பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்டு 6 நாட்களாகியும், இன்னும் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன இந்தக் கிராமங்கள்.
பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையம், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள பாளையத்தில் அமைந்துள்ளது. இந்தத் துணை மின் நிலையம், ‘கஜா’ புயலால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதுதான் மின்சார வசதி கிடைப்பதற்குத் தாமதமாகிறது என்கிறார்கள் பட்டுக்கோட்டை வாசிகள்.
பட்டுக்கோட்டை நகரத்திலேயே போஸ்ட் ஆபீஸ் முதல் முருகையா தியேட்டர் வரை, மணிக்கூண்டு முதல் போஸ்ட் ஆபீஸ் வரை என ஒருசில பகுதிகளில் மட்டுமே தற்போது மின்சார வசதி உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், பேராவூரணி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் எனப் பல ஊர் பேருந்துகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்துக்கே இன்னும் மின்சார வசதி கிடைக்கவில்லை என்பதுதான் காலத்தின் கொடுமை.
“சிட்டிக்குள்ள இருக்குற எங்களுக்கே இன்னும் கரண்ட் கிடைக்கல. ஒருசில ஏரியாக்கள்ல மட்டும் கரண்ட் இருக்கு. ஜெனரேட்டர் வச்சிருக்குறவங்க நிலை பரவாயில்லை. நாங்கதான் தண்ணி இல்லாமலும், கொசுக்கடியிலும் அவதிப்படுகிறோம்” என்கிறார் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல்.
பட்டுக்கோட்டையைச் சுற்றி ஆதனக்கோட்டை, அணைக்காடு, கார்காவயல், புனல்வாசல், திருச்சிற்றம்பலம், கார்காவயல், ஒட்டங்காடு, துறவிக்காடு, ஊரணிபுரம், ஆலத்தூர், ஆம்பலாப்பட்டு, வடசேரி, மதுக்கூர், தாமரங்கோட்டை, ஆத்திக்கோட்டை எனப் பல கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களில் மின்சார வசதி இல்லை என்பது சோகமான விஷயம். கிராமங்களைப் பொறுத்தவரை, ஏராளமான மின் கம்பங்கள் வயற்காடுகளுக்கு உள்ளே இருக்கின்றன. ‘கஜா’ புயலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவை விழுந்துவிட்டதால், அவை அனைத்தையும் மொத்தமாக அப்புறப்படுத்தி, புதிதாக மின் கம்பங்களை நட்ட பிறகே மின்சார வசதியை ஏற்படுத்தித் தர முடியும். இல்லையென்றால், அறுந்து கீழே விழுந்துள்ள மின்சாரக் கம்பிகளில் யாராவது சிக்கிக் கொள்ளும் அபாயம் நேரிடும்.
மின்சார வசதி இல்லாததால் குடிநீர் பிரச்சினை ஒருபக்கம் பூதாகரமாக மிரட்ட, இன்னொரு பக்கம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ளவர்களைத் தொடர்புகொள்ள முடியாத மிகப்பெரும் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இதனால், யாருக்கு என்ன உதவி தேவை என்பதைத் தெரிந்து செய்ய முடிவதில்லை. சில ஊர்களுக்கு மட்டும் உதவிகள் தொடர்ச்சியாகச் சென்றடைய, யாரும் தொடர்புகொள்ள முடியாத குக்கிராமங்களில் உள்ளவர்கள் இன்னும் பசியால் வாடி வருகின்றனர்.
“எங்களால் எளிதில் சென்றடைய முடியும் இடங்களில் மட்டுமே உதவிகளைச் செய்து வருகிறோம். சரியான சாலை வசதி கூட இல்லாத பல கிராமங்களை எங்களால் சென்றடைய முடியவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால், எங்களிடம் நிவாரணப் பொருட்கள் இருந்தும் உரியவர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்கிறார் தன்னார்வத்துடன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கல்லூரிப் பேராசிரியர் சதீஷ்.
சில இடங்களில் மட்டும் ஜெனரேட்டர் வசதியைக் கொண்டு தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி, குடிநீருக்குச் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், எல்லா கிராமங்களுக்குமே இந்த வசதி கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.
மின்சார வசதி கிடைக்கத் தோராயமாக எத்தனை நாட்களாகும் என்று தெரிந்து கொள்வதற்காக பட்டுக்கோட்டை துணை மின் நிலையத்தைத் தொடர்பு கொண்டோம். போன் மணி ஒலித்துக் கொண்டிருந்ததே தவிர, அதை எடுப்பதற்கு ஆள்தான் அங்கு இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT