Published : 17 Nov 2018 09:05 AM
Last Updated : 17 Nov 2018 09:05 AM
சுஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 150 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. காலை 8 மணிக்குப் பிறகு படிப்படியாக காற்று குறைந்தது. சூறைக்காற்று வீசியபோது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில், அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டையில் தலா 17 செ.மீ மழை பதிவானது. அதேபோல, நீடாமங்கலத்தில் 6.6 செ.மீ, வலங்கைமானில் 6 செ.மீ, திருவாரூரில் 4 செ.மீ, நன்னிலத்தில் 4.3 செ.மீ, மன்னார்குடியில் 3.7 செ.மீ, பாண்டவையாறு தலைப்பு பகுதியில் 4.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சூறைக்காற்று வீசியதன் கார ணமாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, முத்துப்பேட்டை, மதுக்கூர் சாலை மற்றும் மன்னார்குடி, தஞ்சை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து, சாலை யின் குறுக்கே விழுந்தன. இதேபோல, மின்கம்பங்களும் ஆங்காங்கே உடைந்து விழுந் ததால் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டது. குறிப்பாக மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப் பேட்டை, திருமக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலைகளிலும், அங்கிருந்து கிராமங் களுக்குச் செல்லும் சாலைகளிலும் மரங்களும், மின்கம்பங்களும் விழுந்து தடையை ஏற்படுத்தியதால், தலையாமங்கலம், குறிச்சி, பெருகவாழ்ந்தான் உட்பட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் போக்குவரத்து முற்றிலும் துண்டிக் கப்பட்டது. இந்த சூறைக் காற்றால், ஓட்டு வீடுகளின் கூரைகள், மாடிகளில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், பிவிசி வாட்டர் டேங்குகள் தூக்கி வீசப்பட்டு, சாலைகளில் விழுந்தன. மன்னார்குடி பேருந்து நிலைய உள்பகுதியில் உள்ள நகராட்சி கட்டிடத்தின் சன்ஷேடு இடிந்து விழுந்து, கீழ்தளத்தில் உள்ள கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் கஜா புயலுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக் கப்பட்டது.
இந்நிலையில், புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று காலை முதலே பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை துரிதப் படுத்தினார். மன்னார்குடி தெப்பக்குளம் பகுதி மற்றும் தாலுகா சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணிகளை பார்வையிட்டு மீட்புப் பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து சவளக்காரன் நிவாரண முகாம், கூத்தாநல்லூர் பகுதிகளில் புயல் பாதித்த இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர், திருவாரூர் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மணிவாசன், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோருடன் திருவாரூரில் உள்ள புயல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிவாரண முகாம்கள் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஆர்.காமராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் 202 நிவாரண முகாம்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 792 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயல் கரையை கடப்பதற்கு முன்பே தாழ்வான பகுதிகள் என கண்டறியப்பட்டு, அங்கிருந்த மக்கள் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டதால் பெருமளவு உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டு விட்டன. அதேநேரத்தில், மாவட்டம் முழுவதும் 28,500 மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. 3,000 மின்கம்பங்கள் விழுந்து கிடக்கின்றன. மரங்களை அகற்றி, மின்கம்பங்களை சீரமைக்க வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர். 430 சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட உள்ளனர். சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு, போக்குவரத்து வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று(நேற்று) அதிகாலை என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்தார். அவரிடம் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு இருப்பதை சுட்டிக்காட்டினேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT