Last Updated : 26 Nov, 2018 04:13 PM

 

Published : 26 Nov 2018 04:13 PM
Last Updated : 26 Nov 2018 04:13 PM

பகலாவது பசியோட போகுது; ராப்பொழுது பயத்தோடு நகருது!- கறம்பக்குடி, அதிராம்பட்டினம் இன்னும் சில தஞ்சை கிராமங்களின் நிலை இதுதான்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில கிராமங்களைப் பார்க்கும்போது புயல் புரட்டிப் போட்டது என்பதை வெறும் செய்தித் தலைப்பாகக் கடந்துவிட முடியாது.

புயல் அப்பகுதிகளை உண்மையிலேயே தடம் தெரியாமல் புரட்டிப் போட்டிருக்கிறது. களப்பணியில் இருக்கும் நண்பர் ஒருவர் தஞ்சை கிராமங்கள் எப்படி இருக்கின்றன எனக் கூறும்போது சொன்ன தகவல் இது.

புயலில் வீரியத்தைச் சொல்லும்போது இன்னும் ஓர் உவமையுடன் அவர் சொன்னார். மொட்டை அடித்த தலை மாதிரி இருக்கிறது தஞ்சையின் உள் கிராமங்கள் என்று. எங்கெங்கும் வெறுமை நிறைந்திருப்பதையே அவர் இவ்வாறு விவரித்தார்.

மேடை நாடகக் கலைஞரான விஜயகுமார், புயல் பாதித்த மறுநாள் முதல் களப்பணியில் இருக்கிறார். கள நிலவரம் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

''நவம்பர் 15 நள்ளிரவில் சுழல ஆரம்பித்த கஜா புயல் குடிசைப் பகுதிகள் அதிகமாக நிறைந்த தஞ்சாவூர் உள் பகுதிகளில் ஈவு இரக்கமின்றி பதம் பார்த்ததன் விளைவு பெரிய கோவில் சுற்றியுள்ள சில பகுதிகளைத் தாண்டியதுமே பாதிப்பு கண்கூடாகத் தெரிகிறது.

நெய்வேலி, அதிரன் விடுதி, சூரக்கோட்டை, கறம்பக்குடி, அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, மதுக்கூர், புனல்வாசல், ஒட்டங்காடு, துறவிக்காடு,திருச்சிற்றம்பலம், பேராவூரணி, கொன்றைக்காடு, ஆலத்தூர், பள்ளத்தூர் இன்னும் பல கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிராமத்துக்கு நிவாரணப் பொருள் அளிக்கச் செல்லும்போதுதான் அண்ணா இந்த ஊரைத் தாண்டி இன்னும் சில ஊர்கள் இருக்கின்றன. அங்கேயும் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். அந்த ஊருக்கே சாகசம் செய்ததுபோல் சென்ற எங்களுக்கு அதற்குப் பின்னாலும் ஒரு ஊர் தவிப்புடன் இருக்கிறது எனக் கேட்கும்போது நிலைமையை எப்படி யோசித்துப் பார்த்தாலும் கண் முன் நிறுத்த முடியவில்லை.

புயல் பாதித்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் மின்சாரம் இல்லை. பகல் நேரத்தில்தான் நாங்கள் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்கிறோம். அப்படிச் சென்றபோது குக்கிராம பெண் ஒருவர், பகல் நேரமாவது பசியோடு போகுது, ராப்பொழுது பயமும் சேர்ந்து வருது என்றார். சூரக்கோட்டை, கடம்பங்குடி இன்னும் சில தஞ்சை கிராமங்களின் நிலை இதுதான்.

வீடில்லை. மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை உயிர் மட்டும்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது அந்த மக்களுக்கு. இதில் கொடுமை என்னவென்றால் இன்று வரை சில உள் கிராமங்களில் தினந்தோறும் மழை பெய்கிறது. ஏதாவது ஈரச்சுவருக்கு அருகே மிச்சம் மீதியிருக்கும் ஓடுகள் கீழ் ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்தப் பகுதிகளுக்கு எல்லாம் மிக மிக அவசரத் தேவை தார்பாய்தான். குறைந்தபட்சம் கூரைக்கு அடியிலாவது பசித்திருப்பார்கள். இதைச் சொல்லும்போது வேதனையாகத் தான் இருக்கிறது. ஆனால், உணவு, உடை, உறைவிடம் எதுவுமே இன்றி நம் சகா எப்படித்தான் வாழ்க்கையைச் சகிப்பான்.

முதல் சில நாட்கள் நாங்கள் ஊர் தேடி சென்று உதவினோம். இப்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக பிரதான சாலைகளுக்கு வந்துவிடுகின்றனர். நிவாரணப் பொருட்களுடன் ஏதாவது வாகனம் வந்தால் உடனே அதை முற்றுகையிட்டு உதவி கோருகின்றனர். மனம் வெதும்பிப் போகிறது.

விதை நெல்லை விதைத்த விரல்கள் அவை. விளைந்த நெல்லை அள்ளி அள்ளி அளந்த கைகள் அவை. ஆனால் இன்று ஒரு கட்டைப்பையில் இருக்கும் சிறிய நிவாரணப் பொருட்களுக்காக கரம் கூப்புகிறது. அவர்களை எப்படிக் கடந்து செல்ல முடியும்?

ஒரு அரசாங்கம் இதற்குள் ஓடோடி வந்து சகல உதவிகளையும் செய்திருக்க வேண்டாமா? மின்வாரிய ஊழியர்கள்தான் சீரமைப்புப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மற்றபடி சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமல் வேலைகள் பல முடங்கிக் கிடக்கின்றன.

 

 

தென்னை இப்பகுதியின் பிரதான விவசாயம். எப்படிப் பார்த்தாலும் குறைந்தது 50 லட்சம் தென்னை மரங்களாவது வீழ்ந்திருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 20 வருட மரம். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். எனது நண்பர் ஒருவர் சூரக்கோட்டையைச் சேர்ந்தவர். அவருக்கு 2000 தென்னை மரங்கள் இருந்தன. அண்மையில் அவரது திருமணம் நடந்தது. அப்போது திருமணப் பரிசாக தேங்காய்களை அனுப்பி வைத்தார். எளியோர்க்கு கொடுக்கும்படி சொல்லியிருந்தார். ஆனால், புயல் தாக்கிய பின்னர் அவரைப் பார்க்கச் சென்றபோது அத்தனை மரங்களையும் இழந்து நின்றார். அவருக்கு நாங்கள் அரிசி மூட்டை வழங்கி வந்தோம். இந்த நண்பரைப் போலத்தான் தஞ்சை கிராம விவசாயிகள் பலரும் ஒரே இரவில் தெருவுக்கு வந்துள்ளனர். இவர்களுக்கு எல்லாம் இந்த அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? என்று கேள்வி எழுப்பினார்.

அதிரவைத்த அமைச்சர்!

புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நிவாரணப் பணிகளில் தேக்கம் இருப்பதாக அரசாங்கம் மீது பரவலாக குற்றச்சாட்டு நிலவ,  கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைப் பார்வையிட வந்திருந்த தமிழக அமைச்சர் ஒருவர் அளித்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாமல் இருக்கின்றனர் அப்பகுதி மக்கள். அந்த அமைச்சரிடம் ஊர்க்காரர் ஒருவர் என்னைய்யா இப்ப வர்றீங்க? என கேட்க, நான் என்ன றெக்க கட்டிக்கிட்டா வர முடியும் என்று அதிர்ச்சியான பதிலை அளித்திருக்கிறார்.

இல்லைய்யா நாங்கள் பசியோட இருக்கோம்னு அவர் சொல்ல, ஒரு மனிதன் 10 நாள் வரைக்கும் சாப்பாடு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு வாழலாம் என சொல்லிவிட்டு அருகில் நின்ற குழந்தை கையில் ஒரு ரஸ்க் பாக்கெட்டை திணித்துவிட்டுச் சென்றிருக்கிறார். இதைக் கேட்ட மக்கள் திகைத்துப்போய் நின்றுள்ளனர்.

எரிந்துவிழுந்த எம்.எல்.ஏ.,

சரி தஞ்சாவூரில் பாதிப்பு இப்படி இருக்கிறதே. ஒரத்தநாடு மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக களப் பணியாளர்கள் சொல்கிறார்களே என்று ஒரத்தநாடு எம்.எல்.ஏ.,வைத் தொடர்பு கொண்டால் அவரோ எரிந்து விழுந்தார்.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இப்படி இருக்கும்போது புயல் பாதிப்பிலிருந்து மீண்டு எழு மக்களுக்கு பல வருடங்கள் ஆகும் என்பது மட்டுமே நிதர்சனம்.

 

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x