Published : 26 Nov 2018 07:26 PM
Last Updated : 26 Nov 2018 07:26 PM
தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது என்று காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.
சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அருகே போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரை நிறுத்தியபோது, அதில் நடிகை காயத்ரி ரகுராம் இருப்பது தெரிந்தது.
அவர் மதுபோதையில் காரை ஓட்டியது சோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் காவலர் ஒருவர் காயத்ரியின் காரை ஓட்டி அவரை வீட்டில் பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்த்தார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் பொய்யானது. இச்செய்தியை எழுதிய நிருபர் தான் போதையில் இருந்தார் என்று கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியிருந்தார் காயத்ரி ரகுராம். மது போதையில் இருந்தது தொடர்பான செய்தி, அனைத்து முன்னணி நாளிதழ்களும், இணையங்களும் வெளியிட்டது.
இந்நிலையில், பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கிறார் காயத்ரி ரகுராம். தற்போது, தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.
தமிழக பாஜக தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர். இந்த பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன்.
என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நான் சமீபகாலமாக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. ஆனாலும் சில இளம் மனதுகள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றன. இளந்தலைவர்களுக்கு வாழ்த்துகள்.
எல்லாம் கர்மா. அவர்கள் என்றாவது வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஆனால், இதே மோசமான இதயத்தோடு அல்ல. இப்படிப்பட்ட அரசியல் பற்றி பதிவிடகூட எனக்கு விருப்பமில்லை
இவ்வாறு காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் உறுப்பினராக இருக்கும் ஒருவரே, அக்கட்சியை விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT