Last Updated : 01 Aug, 2014 10:00 AM

 

Published : 01 Aug 2014 10:00 AM
Last Updated : 01 Aug 2014 10:00 AM

இரும்புப் பட்டறையில் சைக்கிள் சாதனையாளர்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியம் இருக்கும். சிலரது உழைப்பும் சாதனையும் வெளியே தெரியும். பலரது சாதனை வெளி உலகத்துக்கு தெரிவதில்லை. இரண்டாவது வகையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48).

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் தெருவில் தனது தம்பியின் இரும்பு பட்டறையில் உதவியாளராக வேலை செய்கிறார். எந்நேரமும் இரும்பு அடிப்பது, பற்றவைப்பது ஆகிய வேலைகள்தான் என்றாலும், அதையும் தாண்டி சைக்கிள் மீது இவருக்கு தீராத காதல். பட்டறையில் உள்ள இரும்புத் துண்டுகள், சைக்கிள் கடையில் மிச்சம் மீதி விழும் பாகங்களை ஒன்றுசேர்ப்பார். வித்தியாசமான சைக்கிளை உருவாக்கிவிடுவார். கடந்த 15 ஆண்டுகளாக இது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு.

மூன்று நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக அமர்ந்து ஓட்டுவது போன்ற சைக்கிள்கள் வெளிநாடுகளில் உண்டு. அதுபோல சுமார் 10 அடி நீளமுள்ள சைக்கிள் ஒன்றை ராஜேந்திரன் உருவாக்கினார். அவர் மட்டுமே உட்கார்ந்து ஓட்டி அப்பகுதியினரை வியக்கவைத்தார். பின்னர், ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உள்ள சைக்கிளை வடிவமைத்தார். இந்த வரிசையில், செயின் இல்லாத சைக்கிளை தற்போது வடிவமைத்துள்ளார்.

முன் சக்கரம், வழக்கமான சைக்கிள் சக்கரம். பின் சக்கரம் உயரமானது. பட்டறையில் வீணாகும் இரும்புத் துண்டுகள், பயன்படாத சைக்கிள் பாகங்கள், சில ஸ்பிரிங் ஆகியவற்றின் உதவியுடன் இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். செயின் இல்லாத இந்த சைக்கிளை அவர் மிதித்துச் செல்வதை அப்பகுதியினர் வைத்தகண் வாங்காமல் பார்க்கின்றனர்.

‘‘புதிது புதிதாக நானே பலப்பல வடிவில் சைக்கிள் உருவாக்குவது பற்றிக் கேள்விப்பட்டு, பல பிரபல நிறுவனங்களில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தது. எனக்கு படிப்பறிவு கிடையாது. அனுபவத்தின் அடிப்படையில், மகிழ்ச்சிக்காக செய்கிறேன். கூலிக்கு செய்ய விருப்பம் இல்லை என்பதால், வேலைக்காக வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்’’ என்கிறார்.

விதவிதமாக சைக்கிள்களை உருவாக்கியபோதிலும் அதை பத்திரப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் ராஜேந்திரனுக்கு இல்லை. கடுமையாக உழைத்து பார்த்துப் பார்த்து உருவாக்குவார். உருவாக்கி முடித்த பிறகு, அதை எடுத்துக்கொண்டு ஆசைதீரப் போய் வருவார். அவ்வளவுதான்.. அதை அப்படியே எங்காவது மூலையில் துருப்பிடிக்க போட்டுவிட்டு, அடுத்த தயாரிப்புக்கு கிளம்பிவிடுவார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x