Last Updated : 13 Nov, 2018 08:55 AM

 

Published : 13 Nov 2018 08:55 AM
Last Updated : 13 Nov 2018 08:55 AM

உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி; நாடு முழுவதும் மூடப்படும் பட்டாசு ஆலைகள்: ஒரு கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் பட்டாசு ஆலைகளைத் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த மாதம் 23 மற்றும் 31-ம் தேதிகளில் இடைக்காலத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில், நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவற்றுக்குத் தடை இல்லை. சர வெடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும். இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. பட்டாசு தயாரிக்கப் பயன்படும் பேரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 60 சதவீதம் உற்பத்தி இழப்பு, சரவெடிகள் தடையால் 20 சதவீத உற்பத்தி இழப்பு,பசுமை பட்டாசுதான் தயாரிக்க வேண்டும் என்பதால் ஒட்டுமொத்தமாகப் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியுள்ள பட்டாசுத் தொழில் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு சங்கத் தலைவர் ஆசைத்தம்பி, பொதுச் செயலர் மாரியப்பன் உட்பட பல்வேறு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், பட்டாசு வணிகர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ஆசைத்தம்பி, மாரியப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் பட்டாசு தயாரிக்க வேண்டும் என்று அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (பெசோ) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பசுமை பட்டாசு என்றால் என்ன என்று அரசு அதிகாரிகளுக்கும், நீதிமன்றத்துக்கும், பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் தெரியாது. உச்ச நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் 100 சதவீதம் உற்பத்தியை மேற்கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். மீறி உற்பத்தி செய்தால் அந்த ஆலையை பெசோ சீல் வைக்கும். ஆலைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யும். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்தை அணுகியே ஆலை உரிமையாளர்கள் மறு உத்தரவு பெற முடியும்.

இதனால் நாடு முழுவதும் பட்டாசு ஆலைகளை திறக்க முடியாத நிலை உள்ளது. நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் டிச.

11-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் மட்டுமின்றி, விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

அத்துடன் தொழில் தகராறு சட்டம் 1937 பிரிவு 25எப்எப்ஏ-ன் படி அறிவிப்பு கொடுத்து ஆலையை மூடுவதற்கான உத்தரவை வெளியிடக்கோரி அனைத்து பட்டாசு ஆலைகள் சார்பிலும் தமிழக தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது.

மேலும் பட்டாசுத் தொழிலைக் காக்க தொழிலாளர்களுடன் இணைந்து பல்வேறு தொடர் போராட்டங்களிலும் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x