Published : 26 Nov 2018 04:38 PM
Last Updated : 26 Nov 2018 04:38 PM
மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திர பாண்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியானது. இந்த படம் மதுரையில் 5-க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான நிலையில், ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்திருந்தேன்.
1000 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பது விதிமீறல்.16.10 2017 ஆம் ஆண்டு உள்துறை (சினிமா) வெளியிடபட்ட அரசாணையில் கட்டணங்கள் குறித்து வரைமுறைபடுத்தபட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலீக்கபட வேண்டும் எனவும், மற்ற திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை மட்டுமே வசூலீக்க வேண்டும் எனவும், ஏசி திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என்றும் அரசாணையில் உள்ளது.
ஆனால், அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதையும் மனுவில் குறிப்பிட்டிருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. ஆகவே அது தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனிநபர்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி விதிக்குட்பட்ட கட்டணத்தை வசூலித்து, அந்த நபர்கள் மூலம் பொதுமக்களுக்கு கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்ட விரோதமாக இது போல கட்டணம் வசூலிக்கப்பட்டது, குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், நவம்பர் 6 முதல் 16 ஆம் தேதி வரையில் மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையைதாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT