Published : 27 Nov 2018 01:59 PM
Last Updated : 27 Nov 2018 01:59 PM

உதகையை அடுத்த கேத்தி பாலாடாவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து காய்கறி விவசாயம்: வீட்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு

கழிவுநீரை மறுசுழற்சி செய்து காய் கறி விவசாயம் செய்யப்படுவதன் மூலமாக, ஆண்டுக்கு ஒரு வீட்டில் இருந்து ஒரு லட்சம் லிட்டர் நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பிரதான மாக விளங்குவது தேயிலை மற்றும் காய்கறி விவசாயம். தற்போது பசுந்தேயிலைக்கு போதுமான விலை கிடைக்காததால், காய்கறி விவசாயத்துக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். அதேசமயம், நீர் கிடைக்காதபோது விவசாயம் பொய்த்து போகிறது. இதனால், குறைந்த நீரில் அதிக மகசூல் செய்யும் முறைகளை விவசாயிகள் கற்றறிந்து வருகின்றனர்.

அந்த வகையில், உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் கழிவுநீரை பயன்படுத்தி பெண் விவசாயிகள் விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இதற்கு, அருவங்காடு கிராமிய அபிவிருத்தி இயக்கம் வழிவகை செய்துள்ளது.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கிராமிய அபிவிருத்தி இயக்க இயக்குநர் என்.கே.பெருமாள் கூறியதாவது:

ஒரு ஹெக்டரில் காய்கறி விவசாயம் செய்ய 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கியூபிக் மெட்ரிக் தண்ணீர் தேவைப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் நீர் வரத்து குறைந்து, ஆண்டுக்கு 4 முதல் 6 மாதங்கள் மட்டுமே விவசாயம் மேற்கொள்ள முடிகிறது. நீலகிரி மாவட்டத்தின் சராசரி மழை அளவு 1324 மி.மீ. காலநிலை மாற்றத்தால் சில நேரம் மழை அதிகமாகவும், சில நேரம் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால், காய்கறி உற்பத்தியை அதிகரிக்க நீர் மேலாண்மை அவசியமாகிறது.

குறைந்த நீர் பயன்படுத்தும் புதிய முறைகள் மற்றும் நீரை மறுசுழற்சி மூலமாக மீண்டும் பயன்படுத்துவது இன்றியமையாகிறது. இதனை, கிராமிய அபிவிருத்தி இயக்கம் முன்னெடுத்து வருகிறது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் (Black water, Grey water) சுத்தி கரிக்கப்பட்டு, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் Black water சுத்திகரிக்கப்பட்டு இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. Grey water சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்துக்காக பண்ணைக் குட்டைகளில் சேமிக்கப்படுகிறது.

கேத்தி பாலாடாவில் 300 குடி யிருப்புகளில் இருந்து குளியல் நீர் மற்றும் பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தப்பட்ட நீர் சேகரிக்கப் பட்டு, சுத்திகரித்து 15 பண்ணைக் குட்டைகளில் சேகரிக்கப்படுகிறது. கேத்தி பேரூராட்சியின் வளம் மீட்பு பண்ணையில் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டு, இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

160 ஹெக்டரில் விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவு நீர் மூலமாக, 160 ஹெக்டர் பரப்பில் காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக, 398 விவசாயிகள் காய்கறி பயிரிட்டு பயனடைந்துள்ளனர். 183 விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரைப் பயன்படுத்தி வருகின்ற னர். 215 விவசாயிகள், 42 டன் இயற்கை உரத்தை கேத்தி பேரூ ராட்சி வள மீட்பு மையத்தில் இருந்து வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.

இத்திட்டம் மூலமாக ஆண்டுக்கு ஒரு வீட்டில் இருந்து ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழற்சி மூலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலமாக நீர் சேமிக்கப்படு கிறது. இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x