Published : 12 Nov 2018 09:54 AM
Last Updated : 12 Nov 2018 09:54 AM
சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கால்வாய்களில் வளரும் தாவரங்களை அகற்றவும், தூர் வாரவும் ரூ.12 கோடியில் இரு நவீன இயந்திரங்களை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் என மொத்தம் 30 கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முறையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது சென்னையே மிதந்தது. அப்போது மேற்கொண்ட ஆய்வில், இந்த கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், முறையாக தூர் வாரப்படாமல் இருப்பதும், அவற்றில் வளர்ந்துள்ள தாவரங்கள் அகற்றப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டன.
அதைத் தொடர்ந்து அனைத்து கால்வாய்களிலும் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. அப்பணிகளுக்காக மிதவை மீது இயந்திரங்களை ஏற்றி தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை கால்வாய்களில் இறக்குவது, ஏற்றுவது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது சிரமமாக இருந்தது. அகற்றப்பட்ட தாவரங்கள் மற்றும் கழிவுகளை மற்றொரு இயந்திரத்தின் உதவியுடன் அள்ளி, லாரிகளில் போடவேண்டி இருந்தது.
பன்னோக்கு ரோபாடிக் இயந்திரம்இந்நிலையில் இப்பணிகள் அனைத்தையும் செய்யும் ஒரே இயந்திரத்தை சோதனை அடிப்படையில் வாங்க மாநகராட்சி திட்டமிட்டது. அதற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் நீரிலும், நிலத்திலும் இயங்கும் வகையிலான பெரிய நவீன ஆம்பிபியன் இயந்திரம் வாங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறு கால்வாய்களில் தூர் வாருவதற்காகவும், கழிவுகளை அகற்றுவதற்காகவும் ரூ.19 கோடியில் 3 நவீன பன்னோக்கு ரோபாடிக் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. இவை தற்போது கால்வாய்களில் தூர் வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இந்த இயந்திரங்கள், வேறு இயந்திரங்களின் துணை இன்றிகால்வாய்களில் எளிதாக இறங்கிவிடுகின்றன. இவற்றுக்கு மிதவைகள் தேவையில்லை. வேறு இடத்துக்குச் செல்ல லாரிகளின் உதவி தேவையில்லை அதனால் இந்த இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது எளிதாகஉள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்பதால், ஆண்டுதோறும் தூர் வாருதல் மற்றும் தாவரங்களை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் மேற்கொள்கிறது. இந்நேரத்தில் 4 நவீன இயந்திரங்களை கொண்டு அனைத்து கால்வாய்களிலும் கழிவுகளை அகற்ற முடியவில்லை. பழைய முறைப்படி வாடகை இயந்திரங்கள் மூலம் தூர் வார வேண்டியுள்ளது. அதனால் மேலும் இரு நவீன தூர் வாரும் இயந்திரங்களை வாங்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மழைநீர் கால்வாய்களில் துரிதமாக கழிவுகளையும், தாவரங்களையும் அகற்றுவதற்காக ரூ.3 கோடியே 34 லட்சம் செலவில் சிறிய ரக நவீன ஆம்பிபியன் வாகனம் ஒன்று, 8 ஆண்டுகள் இயக்குதல் மற்றும் பராமரித்தல் வசதிகளுடன் வாங்கப்பட உள்ளது. மேலும், ரூ.9 கோடியே 31 லட்சம் செலவில் பன்னோக்கு ரோபாடிக் தூர் வாரும் இயந்திரம் ஒன்று, 3 ஆண்டு இயக்குதல் மற்றும் பராமரிப்பு வசதிகளை வழங்கும் வகையில் வாங்கப்பட உள்ளது. இவற்றுக்காக மொத்தம் ரூ.12 கோடியே 65 லட்சம் செலவிடப்பட உள்ளது.
இவை கொள்முதல் செய்யப்பட்டால், கால்வாய்களில் கழிவுகள், தாவரங்களை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெறும். மேலும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளிலும் மிதக்கும் கழிவுகளை அகற்றவும் எளிதாக இருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT