Published : 12 Nov 2018 09:51 AM
Last Updated : 12 Nov 2018 09:51 AM

ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ரூ.5.50 கோடியில் புதிய நீர்த்தேக்கம்: கரை அமைக்கும் பணி தீவிரம்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரத் தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ரூ.5.50 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொண்டுள்ளது. முதல்கட்ட மாக, கரைகள் அமைக்கும் பணி நடந்துவருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை வரலாறு காணாத அளவில் மழை கொட்டியது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இந்த நிலையில், பெருக்கெடுத்து வரும் மழைநீரை சேமித்து வைத்தால் வெள்ள பாதிப்பை தவிர்க்கலாம். அதேபோல சென்னை, புறநகர் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புதிய நீர்த்தேக்கம் உருவாக்கலாம் என்று பொதுப்பணித் துறை  ஆலோசனை வழங்கியது.

இதன் அடிப்படையில் காஞ்சி புரம் மாவட்டம் பெரும்புதூர் வட்டத்தில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் கிராமங்களில் உள்ள 2 ஏரிகளை  இணைத்து ரூ.5.5 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியது.

ஒரத்தூர் ஏரி 108 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இதில் 31.78 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இதன்மூலம் 146.96 ஹெக்டேர் விவசாய நிலம் பயனடைகிறது. ஆரம்பாக்கம் ஏரி  95 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.

இதில் 20.83 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்க முடியும். இதன்மூலம் 101.17 ஹெக்டேர் விவசாய நிலம் பாசனம் பெறும். இந்த 2 ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.

ஏற்கெனவே, இரு ஏரிகளையும் இணைக்கும் வகையில் நீர்த்தேக் கம் இருந்தது. அதையும் சீரமைத்து, 2 ஏரிகளையும் மேலும் ஏரியின் அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களையும் இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஏரி களை இணைக்கும்போது, அது பெரிய நீர்த்தேக்கமாக மாறும். இதேபோல, வாய்ப்பு உள்ள அனைத்து இடங்களிலும் படிப் படியாக நீர்த்தேக்கங்கள், தடுப்பு அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் 100 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம். இதனால் சென்னை மாநகர் மற்றும் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை ஏற்படும்.

முதல்கட்டமாக, நீர்த்தேக்கத் துக்கு கரை அமைக்கும் பணி கள் ரூ.1.5 கோடியில் நடந்து வருகின்றன. அதேபோல ரூ.4 கோடியில் செக் டேம், நீர்த்தேக்கம், மதகு போன்றவை அமைக்கப்பட உள்ளன.

இந்த ஏரியில் இருந்து அம்மணம்பாக்கம் மற்றும் படப்பை ஏரிக்கு 280 மீட்டர் நீளத்தில் உயர்மட்ட கால்வாய் அமைத்து தண்ணீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட ஏரிகளில் இருந்து மணிமங்கலம் ஏரியில் தண்ணீரை சேமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரத்தூர் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, புதிய நீர்நிலைகளை உருவாக்க ரூ.20 கோடி நிதி தேவைப்படுகிறது. அரசு இந்த நிதியை ஒதுக்கினால், அதிக அளவில் தண்ணீரை சேமிக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x