Published : 17 Nov 2018 09:07 AM
Last Updated : 17 Nov 2018 09:07 AM
தஞ்சாவூர்
கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்ப கோணம் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
கஜா புயல் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வங்காள விரிகுடாவிலிருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வழியாக கரையை கடந்தது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. நள்ளிரவு தொடங்கிய இந்த காற்று நேற்று காலை வரை வீசியது.
மரங்கள், மின்கம்பங்கள் சேதம்
இதனால் மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்கள் சேதமடைந்தன. பலத்த காற்றாலும், மரங்கள் விழுந்ததாலும் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறைக்காற்று பலமாக வீசத் தொடங்கியதும் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து சாலையில் விழுந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங் களும், நூற்றுக்கணக்கான மின் மாற்றிகளும், பட்டுக்கோட்டையில் துணைமின் நிலையமும் புயலால் பெரும் சேதமடைந்துள்ளன. இதனால், சீரமைப்பு பணிகளில் மின்வாரியத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
காற்றும், மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே அதிகம் வரவில்லை. இதனால் நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
பேருந்துகள் நிறுத்தம்
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை, திருவாரூர், நாகை பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. நகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கும்பகோணம் நகரப் பேருந்து நிலையம் பூட்டு போட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ளது. திருச்சி, தஞ்சாவூர் பகுதிக்கு மட்டும் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்படாததால், தஞ்சாவூர், கும்பகோணம் பணிமனைகளில் நூற்றுக் கணக்கான பேருந்துகள்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பட்டுக்கோட்டையில் அதிக பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பட்டுக்கோட்டை பகுதியில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்தும், மரம் முறிந்து விழுந்தும் மொத்தம் 18 பேர் உயிரிழந்தனர்.
பட்டுக்கோட்டையில் வடசேரி சாலையில் நூற்றாண்டுகள் பழமையான பெரியபள்ளிவாசலின் முன்பகுதி இடிந்து சேதமடைந்தது.
500 ஏக்கர் வாழை சேதம்
மாவட்டத்தில் முதல்கட்டமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கும்பகோணம், வளையபேட்டை, ஆடுதுறை பகுதியில் பயிரிடப் பட்டிருந்த 500 ஏக்கருக்கும் மேலான வாழைமரங்கள் காற்றில் சேதமடைந்தன.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் சுமார் 3 லட்சம் தென்னை மரங்கள் இந்த புயலில் வேரோடு சாய்ந்தன.
சேதுபாவாசத்திரம், மல்லிப் பட்டினம், அதிராம்பட்டினம் கடற் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200 விசைப்படகுகள், 1300 நாட்டுப் படகுகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன.சேத விவரங்கள் கணக்கெடுப்பு
தஞ்சாவூரில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடக்க நிலை விசாரணை அடிப்படையில் 3 பசுக்கள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல, இதுவரை 22 வீடுகள் பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினத்தில் படகுகள் சேத விவரங்கள் குறித்து மீன் வளத்துறையினரும், வருவாய்த் துறையினரும் கணக்கெடுத்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், ஒரத்தநாடு ஆகிய வட்டாரங்களில் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோல, கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,800 ஆண்கள், 4,250 பெண்கள், 1,310 குழந்தைகள் என 9,360 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 5,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது, 3,300 மின் கம்பங்கள் இருப்பில் உள்ளன. மேலும், சென்னையிலிருந்து மின் வாரிய சிறப்புக் குழுவினரை தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. எனவே, விரைவில் மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT