Published : 10 Nov 2018 09:01 AM
Last Updated : 10 Nov 2018 09:01 AM

சொத்து வரி சீராய்வு வெளிப்படையாக நடந்தது:  சென்னை மாநகராட்சி உறுதி

சென்னையில் சொத்து வரி சீராய்வு வெளிப்படையாகவும், அரசாணையை பின்பற்றியும் நடத்தப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2008-ம் ஆண்டுமுதல் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து உயர்த்தப்பட வில்லை. அதே நேரத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சிகளில் கடந்த 2008-ம் ஆண்டுவரை உயர்த்தப்பட்ட சொத்து வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால் விரிவாக்கத் துக்கு முந்தைய சென்னை மாநகராட்சியில் சொத்து வரி குறைவாகவும், இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரி அதிக மாகவும் இருந்தது.

இதற்கிடையில் தமிழகம் முழு வதும், குடியிருப்பு சொத்துகளுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும், வணிக சொத்துகளுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமலும் சொத்து வரி சீராய்வு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், அரசாணைக்கு மாறாக 50 சதவீதத்துக்கு மேல் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாகவும், விஐபி அந்தஸ்துள்ள கோபால புரம், போயஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சொத்து மதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அவற்றுக்கு சொத்து வரி குறைவாக மதிப்பிட்டிருப்பதாகவும் அரசியல் கட்சிகள், பொதுநலச் சங்கங்கள் புகார் தெரிவித்தன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறிய தாவது:

குடியிருப்பு சொத்துகளில், உரிமையாளர் வசிக்கும் இடங் களுக்கு தமிழகம் முழுவதும் சொத்து வரியில் கழிவு வழங் கப்பட்டு வந்தது. 2008-ம் ஆண் டுக்கு பிறகு, அது விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் விரி வாக்கத்துக்கு முந்தைய சென்னை யில் மட்டும் அமலில் இருந்தது. தற்போது விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னையில் சொத்து உரிமையாளர்களுக்கான வரிக் கழிவு விலக்கிக்கொள்ளப்பட்டுள் ளது. தற்போது உரிமையாளர் வசிக்கும் சொத்து, வாடகைதாரர் வசிக்கும் சொத்து ஆகியவற்றுக்கு சமமாக சொத்து வரி நிர்ணயிக் கப்பட்டுள்ளது. வரிக்கழிவு விலக் கப்பட்டதால், 50 சதவீத வரி உயர்வுடன் சேர்ந்து 87 சதவீதம் வரை வரி உயர்ந்திருக்கிறது. இதில் தவறு ஏதும் இல்லை.

சென்னையில் சில பகுதிகளில் சொத்துவரி குறைவாக மதிப்பிடப் பட்டதாக புகார் தெரிவிக்கப்படு கிறது. அப்பகுதிகளில் ஏற்கெனவே இருந்த சொத்து வரி, அரசு ஆணை யில் குறிப்பிட்டுள்ளவாறு தற் போது 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு மாநகராட்சி சார்பில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பீடு செய்ததைவிட தற்போது பல சொத்துகளின் பரப்புகள் அதி கரித்துள்ளன. ஆனால் அவர்கள் பழைய மதிப்பீட்டின்படியே இதுவரை சொத்து வரியை செலுத்தி வந்தனர். தற்போது சொத்துவரி சுய மதிப்பீட்டு விண்ணப்பங்களின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து சொத்து வரி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது அவர்களுக்கு சொத்து வரி அதிகரித்துள்ளது. இதில் குளறுபடி ஏதுமில்லை.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வானது அறிவியல் முறைப்படி, மனிதர் களின் தலையீடு இன்றி, வெளிப் படையாக, அரசு ஆணையின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆட்சேபங்கள் இருந்தால், மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிர்வாகம்), வட்டார துணை ஆணையர்களிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க லாம். அதை விசாரித்து உரிய தீர்வு காணப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x