Published : 29 Nov 2018 09:45 AM
Last Updated : 29 Nov 2018 09:45 AM
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலையில் கோரக்கர் குகைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்து தடுப்புகள் அமைத்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இங்குள்ள கோயில்களுக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் சென்று வரலாம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடைபெறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்க விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
2015-ல் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, நாள்தோறும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சதுரகிரி மலையில் கோரக்கர் சித்தர் தவமிருந்து வழிபட்ட குகை உள்ளது. சதுரகிரி மலைக்குச் செல்லும் வழியில் மாங்கனி ஓடை, வழுக்குப்பாறை, சங்கிலிப் பாறையைத் தாண்டிச் சென்றால் கோரக்கர் சித்தர் குகையைக் காணலாம். ஏராளமான பக்தர்கள் இந்த குகையில் வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்நிலையில், தற்போது கோரக்கர் சித்தர் குகை பாதை வனத்துறையினரால் வேலி அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கோரக்கர் குகைக்குச் சென்று வழிபட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சதுரகிரி மலை, சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்கு குறிப்பிட்ட பாதையில் சென்று வர மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு. வேறு எந்தப் பாதையில் செல்லவும் அனுமதி இல்லை. அதை மீறி சிலர் காட்டாறு பகுதியில் உள்ள கோரக்கர் குகைக்குச் சென்று வருகின்றனர். அதைத் தடுக்கவே, இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT