Last Updated : 14 Aug, 2014 10:00 AM

 

Published : 14 Aug 2014 10:00 AM
Last Updated : 14 Aug 2014 10:00 AM

13 ஆண்டுகளாக சென்னை நகர மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்த கிருஷ்ணா நீர்: இதுவரை 69.3 டி.எம்.சி தண்ணீர் கிடைத்துள்ளது

கடந்த 13 ஆண்டுகளாக சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கி வருகிறது ஆந்திராவின் கிருஷ்ணா நீர். 1996-ம் ஆண்டு முதல் இதுவரை சென்னைக்கு 69.3 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் இருந்து சோமசீலா மற்றும் கண்டலேறு அணைகள் வழியாக தமிழகத்துக்கு ஆண்டுக்கு 15 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் வழங்குவது என்று 28-10-1977ல் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவும் 1983-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி கையெழுத்திட்டனர்.

திட்டப் பணிகளை அதே ஆண்டு மே 15-ம் தேதி அன்றைய பிரதமர் தொடங்கி வைத்தார். அதையடுத்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி வரை 179 கி.மீ. தூரத்துக்கு கிருஷ்ணா நீர் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது.

ஆயிரம் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட கிருஷ்ணா நீர் கால்வாய், 1996-ம் ஆண்டு வெட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படுகிறது. முதல்முறையாக 1996-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பூண்டி ஏரியை கிருஷ்ணா நீர் வந்தடைந்தது. அன்றிலிருந்து இதுவரை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 69.3 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 1-ம் தேதி திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர், 5-ம் தேதி மாலை பூண்டி ஏரியை வந்தடைந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதிலிருந்து திருப்பதி, காளகஸ்தி குடிநீர் தேவைக்காகவும் பாசனத்துக்காகவும் எடுக்கப்படும் தண்ணீர் போக மீதமுள்ள நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.

புதன்கிழமை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 415 கனஅடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருந்தது. இதுவரை 230 மில்லியன் கனஅடி நீர் வந்துசேர்ந்துள்ளது. 2001-ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை கிருஷ்ணா நீர் தீர்த்து வருகிறது” என்றார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. தற்போது 1,858 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேநாளில் 1,007 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.

சென்னையில் வீடுகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு தினமும் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x