Published : 02 Nov 2018 08:43 AM
Last Updated : 02 Nov 2018 08:43 AM

மகிழ்ச்சியான தருணங்களில் கவனம் தேவை: பட்டாசு புகை குழந்தைகளின் நுரையீரலை பாதிக்கலாம்

தீபாவளி போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகள் மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பட்டாசு புகை குழந்தைகளின் நுரையீரலை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

மாறிவரும் வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். அவர்கள் வீடு திரும்பும்போது குழந்தைகள் தூங்கி விடுகின்றனர். காலையில் பெற்றோர் அவசர அவசரமாக பணிக்கு புறப்படுவதிலும், குழந்தைகள் தயாராகி பள்ளிக்கு புறப்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனால் பெற்றோர் - குழந்தைகள் இடையிலான இடைவெளி அதிகரித்துவிடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருந்திடுவதுபோல அமைவதுதான் தீபாவளி போன்ற பண்டிகைகள்.

இதில், பெரியவர்களுக்கென தனியாக எந்தவித மகிழ்ச்சியும் இல்லை. குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றி, அவர்களது முகத்தில் ஏற்படும் குதூகலத்தைக் கண்டு மகிழ்வதே பெரியவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

கிடைக்கிற விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேசலாம். குழந்தைகளின் பள்ளி சூழல், அவர்களது நண்பர்கள், வகுப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் போன்றவற்றை பெற்றோர்கள் கேட்கலாம். இது, குழந்தைகளுக்கு உற்சாகத்தை தருவதுடன், பெருமகிழ்ச்சியையும் அவர்கள் முகத்தில் பார்க்க முடியும். ஆனால், பெரியவர்களோ பட்டாசு மட்டுமே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தரும் என தவறாக எண்ணுகின்றனர்.

சாலையில் பறக்கும் தூசி, வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றால் காற்று மாசு ஏற்படுகிறது. அவை எல்லாவற்றையும்விட பட்டாசு, மத்தாப்புகளில் இருந்து வெளியேறும் புகை ஆபத்தானது. பட்டாசு புகையில் வேதிப்பொருட்களின் அளவு அதிகம் உள்ளது. தூசி, வாகனப் புகை போன்றவை சிதைவடைந்து, ஓரளவு வீரியம் குறைந்த நிலையில்தான் நம்மை வந்தடையும். ஆனால், பட்டாசு புகை நமக்கு அருகிலேயே உருவாவதால், அதை உடனே நுகர்கிறோம். அதில் மாசு அடர்த்தி அதிகமாக இருப்பதால், பாதிப்பும் அதிகம். குறிப்பாக, இதில் பெரியவர்களைவிட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

பட்டாசு புகையால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நுரையீரல் நோய் துறை கூடுதல் பேராசிரியர் ஆர்.மஞ்சு கூறியதாவது:

மனிதர்களுக்கு 12 வயதில்தான் நுரையீரல் முழு வளர்ச்சி அடைகிறது. அதனால், பல்வேறு வேதிக் கலவைகளுடன் கூடிய பட்டாசு புகையை குழந்தைகளின் நுரையீரலால் சமாளிக்க முடியாது. எனவே, கடுமையான மூச்சுத் திணறல் ஏற்படும். அத்தகைய சூழலில், குழந்தைகளை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சுவாச சிகிச்சை அளிக்க வேண்டும்.

தீபாவளியின்போது சமையல், பலகாரம் செய்வதோடு, குழந்தைகள் மீதும் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். குறைந்த புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே குழந்தைகள் வெடிக்க கொடுக்க வேண்டும். அதிக பட்டாசு புகை வெளியேறும் இடங்களில் குழந்தைகளை நிறுத்தக் கூடாது.

பாம்பு மாத்திரை சிறிய அளவில் இருப்பதால், அது குழந்தைகளுக்கான பட்டாசு வகை என பலரும் கருதுகின்றனர். அதில் இருந்து வெளியேறும் புகை குழந்தைகளின் நுரையீரலை கடுமையாக பாதிக்கும்.  இதன் பாதிப்புகள் உடனே தெரியாது. பின்னாளில் ஆஸ்துமா, நாட்பட்ட மூச்சுக்குழல் அடைப்பு நோய் போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே, அதுபோன்ற பட்டாசு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

ஏற்கெனவே பல்வேறு காரணங்களால் காற்று மாசு அதிகரித்துள்ளது. கூடவே பட்டாசு புகையும் சேரும்போது, அது குழந்தைகளை மிகவும்  பாதிக்கிறது.  எனவே, பட்டாசு புகை அதிகம் உள்ள பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x