Published : 21 Nov 2018 06:00 PM
Last Updated : 21 Nov 2018 06:00 PM
புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் கிராமங்களுக்கு குடிதண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலையில் பாலின்றி குழந்தைகள் வாடும் நிலையில், அரசின் ஆவின் நிறுவனம் அக்கறையின்றி உள்ளதாக பால் முகவர் சங்க நிர்வாகி எஸ்.ஏ.பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
'கஜா' புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இதில் 6 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இங்கு ஆயிரக்கணக்கான கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளன. புயல் தாக்கியதிலிருந்து கடந்த 5 நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன, வீடுகள், குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, குடிநீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் கடந்த 5 நாட்களாக வாடும் நிலை உள்ளது. புயலுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அரசு புயலுக்குப் பின் வேகம் காட்டாததால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் பல நூறு கிராமங்களில் பச்சிளங் குழந்தைகளுக்கு பால் கூட இல்லாததால் கடும் அவதியடைந்துள்ளனர். இதற்குக் காரணம் என்ன? ஏன் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடையவில்லை?
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமியிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:
புயல் கரையைக் கடந்து 5 நாட்களாகியும் அடிப்படைத் தேவையான பால் கூட போகாததற்கு என்ன காரணம்?
முதல் காரணம் சாலைகள் சரியில்லாதது. இரண்டாவது காரணம் முகவர்களைப் பொறுத்தவரை மொத்தமாக சில்லறை வணிகர்களிடம் கொடுத்துவிடுவோம். ஆனால் அதை வாங்கி வைத்து இருப்பு வைத்து விற்பனை செய்யும் அளவுக்கு தற்போது அங்கு மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாவிட்டால் சில மணிநேரத்துக்கு மேல் வைக்க முடியாது.
இதற்கு மாற்று என்ன?
பால் பவுடர், டெட்ரா பேக் பால் கொடுக்கச் சொல்கிறோம். டெட்ரா பேக் பால் மூன்று மாதம் வரை சாதாரண நிலையில் வைத்தே பயன்படுத்தலாம். தனியார் கம்பெனிகள் ஒன்றிரண்டில்தான் இவ்வகை பால் உள்ளது.
அரசைப் பொறுத்தவரை ஆவினிடம் உள்ளது. ஆனால் அவர்கள் சரியாக சப்ளை செய்வதில்லை. அப்படிப்பட்ட பால் இருந்தால் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்கான பேக்டரி ஆவினுக்கு சேலத்தில் உள்ளது. ஆனால் சரியான விநியோகம் இல்லாததால் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை.
கிராமங்களுக்கு பால் கிடைப்பதில் என்ன பிரச்சினை?
பால் முகவர்களைப் பொறுத்தவரையில் திருத்துறைப்பூண்டி திருவாரூர், பட்டுக்கோடை, பேராவூரணி போன்று வெளியில் உள்ள முக்கியமான இடங்களுக்கு மட்டுமே வைத்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் உள்ளே கிராமங்களுக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. அதற்கு மேற்சொன்ன காரணங்கள்தான் காரணம்.
பாலை குளிரூட்டாமல் காலை 10 மணிவரை வைக்கலாம். அதற்குமேல் வைத்து விற்க முடியாது.
மூன்று மாவட்டங்களிலும் இதுதான் பிரச்சினையா?
ஆமாம். வேதாரண்யம் கடும் பாதிப்பு, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி போன்ற இடங்களில் எங்கள் சங்க நிர்வாகிகளிடம் பேசியதில் பாதிக்கப்பட்ட இடங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. வாகனம் ஓரளவு முக்கியமான பகுதிகளுக்கு வந்துபோகும் அளவுக்கு தயார்படுத்தினாலும் அதைத்தாண்டி உள்ளே போக முடியவில்லை என்கின்றனர்.
திருச்சி, உளுந்தூர்பேட்டையிலிருந்து போகும் கம்பெனிகளிடம் பேசும்போது சாலை கடும் பாதிப்பு அடைந்துள்ளது. அதனால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே போக முடிகிறது. அதற்கு மேல் உள்ளே சென்றால் வாகனம் பழுதானால் மொத்த பாலும் கெட்டுப்போகும் நிலை என்கிறார்கள்.
இதற்கு மாற்று என்ன?
மாற்று என்றால், அன்றே அரசுக்கும், ஆவின் நிர்வாகத்துக்கும் நாங்கள் கோரிக்கை வைத்தோம். பால் பவுடர் மற்றும் டெட்ரா பேக்கிங் பாலை அரசு விநியோகிக்கலாம். அரசிடம் 10 ஆயிரம் டன் பால் பவுடர் உள்ளது. அதெல்லாம் ஒரு கிலோ பாக்கெட்டாக இருக்கும்.
அரசு நினைத்தால் அரை கிலோ, கால் கிலோ பாக்கெட்டுகளாக மாற்றி விநியோகித்திருக்கலாம். டெட்ரா பாலையும் அனுப்பியிருக்கலாம். அதை மக்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசு அதைச் செய்யவில்லை.
இம்மாவட்டங்களுக்கு எங்கிருந்து பால் சப்ளை ஆகிறது?
விழுப்புரம் மற்றும் தஞ்சையில் பால் பண்ணை உள்ளது. சேலத்தில் டெட்ரா பேக் பால் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அவர்களிடம் இருப்பு அதிகம் உள்ளது. அதிலிருந்தும் இழப்பு ஏற்பட்ட பகுதிகளுக்குக் கொடுத்திருக்கலாம்.
ஆனால் ஆவினைப் பொறுத்தவரை நிவாரணப் பணியில் மெத்தனப்போக்குதான் உள்ளது. அரசியல் சார்ந்த கூட்டுறவுச்சங்கம் அரசியல் பிரமுகர்களிடம் உள்ளதால் சேவை மனப்பான்மை இல்லை. முகவர்கள் கையில் இருந்திருந்தால் சரியான சேவை இருந்திருக்கும்.
தனியார் பால் நிறுவனங்களின் பணி எப்படி?
எங்களுக்குத் தெரிந்து பல தனியார் கம்பெனிகள் தினம் ஒருவர் என தனித்தனியாகக் கொண்டு சென்று இலவசமாகவே விநியோகம் செய்துள்ளனர். அதைத் தொடர முடியாததற்கு என்ன காரணம் என்றால் சாலை சரியில்லை என்பதுதான்.
ஊடகங்கள் செல்ல முடிகிற கிராமங்களில் பால் முகவர்கள் செல்ல முடியவில்லையா?
எங்கள் முகவர்களும் சேவை மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர். திருத்துறைப்பூண்டியில் எங்கள் முகவர் ஐஸ்கட்டிகளைப் போட்டு 24 மணி நேரமும் பால் கிடைக்கும் வகையில் செயல்படுகிறார்.
மறுபுறம் பாலை ஓவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்ப்பதில் திரும்ப திரும்ப வந்து செல்ல முடியாது. ஆயிரம் லிட்டர் கொண்டு போனால் அது இரண்டு கிராமங்களுக்குக்கூட போதாது. முக்கியமாக ஆள் பற்றாக்குறை எங்களுக்குப் பிரச்சினையாக உள்ளது.
அரசு இதில் என்ன செய்திருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஆவினைப் பொறுத்தவரை தனியார் பால் நிறுவனங்கள் எடுத்த சேவை முயற்சி அளவுக்குக்கூட ஆவின் எடுக்கவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு.
எப்படிச் சொல்கிறீர்கள்?
நாங்கள் விசாரித்த வரையில் முக்கியமான தனியார் பால் நிறுவனங்கள் அனைத்தும் ஆளுக்கொரு நாள் பாலை இலவசமாக வழங்கியுள்ளனர். ஆவின் அதைச் செய்யவில்லை.
அப்படி இருந்தும் பிரச்சினை உள்ளதே?
அதற்குக் காரணம் கொண்டு செல்லும் நிவாரணங்களை அவர்கள் வழியில் எதிர்ப்படும் இடங்களில் கொடுத்துவிட்டுத் திரும்பி விடுகின்றனர். உள்ளே குக்கிராமங்களுக்கு யாருமே கொண்டு செல்வதில்லை. இதேபோன்றுதான் 2015 சென்னை வெள்ளத்திலும் நடந்தது.
இவ்வாறு பொன்னுசாமி வேதனையுடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT