Published : 18 Nov 2018 10:35 AM
Last Updated : 18 Nov 2018 10:35 AM
கஜா புயல் பாதிப்பில் இருந்து, கொடைக்கானல் மற்றும் மலை கிராமங்கள் இயல்புநிலைக்கு படிப்படியாக திரும்பி வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வீசிய கஜா புயலால் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கொடைக்கானல் மலைச்சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல் கொடைக்கானல்- வத்தலகுண்டு சாலை மற்றும் கொடைக்கானல்- பழநி சாலை துண்டிக்கப்பட்டது.
மேலும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலைக்கு மேல் புயலின் தாக்கம் படிப்படியாக குறைந்ததால் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை, பேரிடர் மீட்புப் படையினர், மின் வாரிய அலுவலர்கள், வருவாய்த் துறையினர் என அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா வந்த பஸ்கள் அனைத்தும் காட்ரோடு பகுதியில் நிறுத்தப்பட்டன. கார்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
நேற்று மாலைக்கு பிறகு மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, பத்து பத்து வாகனங்களாக கொடைக்கானல் செல்ல அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு மேல் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து பஸ்கள் கீழே செல்ல அனுமதிக்கப்பட்டன.
பின்னர் நேற்று இரவு முதல் வத்தலகுண்டு - கொடைக்கானல் சாலை முழுமையாக சீரடைந்தது. ஆனால் கொடைக்கானல்- பழநி சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டபோதும் பாறைகள் விழுந்ததால் அவற்றை அகற்றும் பணி தாமதமானது. இதனால் வாகனங்கள் நேற்று மாலை வரை அனுமதிக்கப்படவில்லை.
பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின் றனர். இன்று காலை முதல் கொடைக் கானல்- பழநி சாலை சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் சாலைகளில் விழுந்த மரங்களை தொடர்ந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சேதமடைந்த மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டுவருகிறது.
நாளைக்குள் அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT