Published : 19 Nov 2018 09:14 AM
Last Updated : 19 Nov 2018 09:14 AM

கூடுதல் இடவசதிகளுடன் நவீன ரயில்கள் தயாரிக்கும் பணி தொடங்கியது: கூடுதலாக 200 பேர் பயணிக்கலாம் என அதிகாரிகள் தகவல்

கூடுதல் இடவசதியுடன் புதிய வகை பயணிகள், மின்சார ரயில்களை ஐசிஎப்-ல் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், ஒவ்வொரு மின்சார ரயிலும் தற்போதுள்ளதைக் காட்டிலும் கூடுதலாக 200 பேர் பயணம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கு மேற்பட்ட மின்சார ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை மற் றும் புறநகர் பகுதிகளில் ஐடி, வாகன உற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அதி கரித்துள்ள நிலையில் மின் சார ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு மின்சார ரயில்களில் 20 சதவீதம் கூட்டம் அதிகரித்துள்ளது.

கூட்ட நெரிசலில் பயணம் செய்யும்போது சிலர் தவறி விழுந்து விடுகின்றனர். குறிப்பாக, கடந்த ஜூலை 24-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த விபத்தில் 5 பேர் இறந்தனர். இது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்திய, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் அறிக்கை வெளியிட்டார்.

அதில், கூடுதல் இடவசதி யுடன் கூடிய ரயில் பெட்டிகளைத் தயாரிக்க வேண்டும், தானியங்கி கதவுகளைப் பொருத்த வேண்டும், கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில்வேக்கு அளித்திருந்தார்.

மின்சார ரயில்களில் தானி யங்கி கதவுகளை பொருத்தி இயக்க முடியாது. நடைமுறை யில் சிக்கல்கள் இருப்பதை தெற்கு ரயில்வேயும் அறிவித்தது.

இதற்கிடையே, தற்போதுள்ள பயணிகள், மின்சார ரயில்களில் கூடுதல் இடவசதி அமைப்பது குறித்து கடந்த ஓர் ஆண்டாக ஆய்வு நடத்தி, புதிய வகை பயணிகள் ரயில் தயாரிக்க பெரம்பூர் ஐசிஎப் (இணைப்பு பெட்டி தொழிற்சாலை) முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐசிஎப் செயலாளர் கே.என். பாபு கூறியதாவது:

ஐசிஎப் தொழிற்சாலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்றவாறு புதிய வகை ரயில் பெட்டிகளைத் தயாரித்து வருகிறோம். அதுபோல், பெரிய நகரங்கள், மாவட்டங்களில் இயக்கப்படும் பயணிகள், மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

எனவே, தற்போதுள்ள ரயில் பெட்டிகளிலேயே கூடுதல் இடவசதி அமைப்பது குறித்து ஐசிஎப் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஓர் ஆண்டாக ஆய்வு நடத்தினர்.

அதன்படி, புதிய வடிவமைப் புடன் புதிய ரயில் பெட்டியை தயாரிக்கவுள்ளாம்.

தற்போது 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் 4-வது பெட்டி மோட்டார் கோச் என இணைக்கப்பட்டு இருக்கும். இதில், மோட்டார், பேட்டரி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் கொண்ட பகுதி இருக்கும். இதனால், அந்த பெட்டியின் பாதி பகுதி இதற்கென ஒதுக்கப்படுகின்றன. ஒரு மின்சார ரயிலில் 4 இடங்களில் மோட்டார் கோச் இருப்பதால், பயணிகளுக்கான இடவசதி தடைப்படுகிறது.

எனவே, இனி புதியதாக தயாரிக்கவுள்ள ரயில் பெட்டி வடிவமைப்பில் மோட்டார் கோச்சை பெட்டியின் கீழ் பகுதிகளுக்கு மாற்றவுள்ளோம். இதனால், பயணிகளுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும். இந்த புதிய வகை ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அவை, அடுத்த மாதம் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இனி ஆண்டு தோறும் 40 பயணிகள், மின்சார ரயில்களை இந்த புதிய வடிவமைப்புடன் தயா ரிக்கவுள்ளோம். இதனால், ஒவ்வொரு ரயில்களிலும் கூடுதலாக 200 பேர் பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x