Last Updated : 14 Nov, 2018 03:09 PM

 

Published : 14 Nov 2018 03:09 PM
Last Updated : 14 Nov 2018 03:09 PM

கஜா புயல் நாளை மாலை முதல் இரவுக்குள் நாகை, வேதாராண்யம் இடையே கரையைக் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே நாளை மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

''கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி நாளை தீவிரப் புயலாக மாறும். ஆனால், தமிழகக் கரையைக் கடக்கும் முன் அதாவது கடலூர் முதல் வேதாரண்யத்துக்கு இடையே கடக்கும் முன் கஜா புயல் வலுவிழக்கக்கூடும்.

நாளை கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும், சில நேரங்களில் காற்று 90 கி.மீ. வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு. கஜா புயல் சென்னையை நோக்கி நகர வாய்ப்பில்லை.

நாளை முதல் சென்னையில் மழை:

சென்னையில் கஜா புயலின் மேகக்கூட்டம் சென்னை நகர் மீது படரத் தொடங்கரியவுடன் நாளை காலை முதல் (15-ம்தேதி) மழை பெய்யத் தொடங்கும். சென்னையில் நாளை நல்ல மழை பெய்யும் என்பதில் சந்தேகமில்லை. அதன்பின் அரபிக்கடலுக்குள் கஜா புயல் செல்லும் போது, கிழக்குக் காற்றை அதிகமாக இழுக்கும் புல் எஃபெக்ட் விளைவு காரணமாக, 16 மற்றும் 17-ம் தேதிகளிலும் சென்னைக்கு மழை இருக்கும். அடுத்த 3 நாட்களில் சென்னையில் 150 மி.மீ. மழை பெய்தால் மகிழ்ச்சி அடைவேன். கஜா புயல் சென்னைக்குக் குறைந்தபட்சம் மழையைக் கொடுக்கும்.

கனமழை பெய்யும் மாவட்டங்கள்

கஜா புயல் தற்போது மேற்கு தென்மேற்காக நகரத் தொடங்கி இருக்கிறது. இதனால் அடர்ந்த மேகக்கூட்டம் தெற்குப் பகுதியை நோக்கி நகர்கிறது. ஆதலால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம், மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களான கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும். டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் மாவட்டங்கள், தெற்கு உள்மாவட்டங்கள் ஆகியவற்றுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் 205 மி.மீ. மழை பெய்யக்கூடும்.

மற்றமாவட்டங்களான கடலூர், புதுச்சேரி, நெல்லை மற்றும் வடக்கு உள்மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளிலும் நல்லமழை இருக்கும்.இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்துகள். நிர்வாக ரீதியான தகவல்களுக்கு அரசின் அதிகாரபூர்வ மையத்தைப் பின்பற்றவும்''.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x