Published : 01 Nov 2018 07:04 PM
Last Updated : 01 Nov 2018 07:04 PM
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோயில்களின் அசையும் சொத்துகள், தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சிலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரியின் விடுதலைத் திருநாள் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அங்கு முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
''கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வருமான உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தேனீ வளர்ப்புத் திட்டம் அனைத்து கிராமங்களிலும் விரிவுபடுத்தப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தவணை தவறாமல் செலுத்தும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள 3 சதவீத வட்டி தள்ளுபடியுடன், மீதமுள்ள 4 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கி, விவசாயிகள் வட்டியில்லாத கடன் பெறவழிவகை செய்யப்படும்.
இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோயில்களின் அசையும் சொத்துகள் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் சிலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசையா சொத்துகள் அனைத்தையும் அளவை செய்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். குத்தகைதாரர்கள் மற்றும் வாடகை தாரர்களிண் வாடகையை உயர்த்தி வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
மழையிலும் கலை நிகழ்வுகள்:
கலை நிகழ்வில் மழைப்பொழிவு அதிக அளவில் இருந்ததால் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளை டெண்ட்டுக்குள் வரும்படி முதல்வர் அழைத்தார். அதன்படி சென்று முதல்வருடன் சிறிதுநேரம் நின்றனர். ஆனால் மீண்டும் குழந்தைகள் சென்று மழையில் நனைந்தபடியே அனைத்து கலை நிகழ்ச்சிகளையும் செய்தனர். அப்போது முதல்வரும் மழையில் நனைந்தபடியே சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்திலும் தேசியக்கொடியேற்றினார் முதல்வர் நாராயணசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT