Published : 24 Nov 2018 12:40 PM
Last Updated : 24 Nov 2018 12:40 PM
தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி வரை பருவமழை பெய்யக்கூடும், இன்னும் 8 காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்க வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
‘கஜா’ புயலைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் தமிழகத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை விடவும் குறைவாகவே பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மீதியுள்ள நாட்களில் எந்தஅளவுக்கு பெய்யும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான செல்வகுமார் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது நிலவும் மேலடுக்கு சுழற்சி 29-ம் தேதிக்குள் அரபிகடல் சென்று விலகி விடும். அதன் பிறகு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அந்தமான் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது உருவாகும் நிலையில் உள்ளது.
ஆனால் அதனை தமிழகம் அல்லது இலங்கையை நோக்கி நகர விடாமல் சுமத்ரா தீவு அருகே மற்றொரு வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஈர்த்து நிற்கிறது. 29-ம் தேதி இந்த நிலை மாற வாய்ப்புள்ளது. அப்போது இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரலாம்.
அவ்வாறு அது நகர்ந்தால் இலங்கைக்கு தெற்காக நகர்ந்து மாலத்தீவு வழியாக தமிழகத்தை நோக்கி வரலாம். அது சாதாரண அளவில் காற்றழுத்த தாழ்வு நிலையாகவே இருக்கும். இதனால் எந்த அளவுக்கு மழை இருக்கும் என்பதை தற்போதே கணிக்க முடியாது.
தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 15-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்புள்ளது. தற்போது குறைவாக பெய்துள்ள மழை, அந்த சமயத்தில் சற்று கூடுதலாக பெய்யும். இதனால் இயல்பான அளவும், இயல்பைவிட சற்று கூடுதலாகவும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இருக்கும்.
2 புயல்கள்
ஜனவரி 15-ம் தேதி வரை 8 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளது. அதில் இரண்டு தீவிரமடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்தில் 2 புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. ஒன்று தென் மாவட்டத்தை நோக்கியும் மற்றொன்று வட மாவட்ட கடலோரத்தை நோக்கியும் வரக்கூடும். அதனால் பெரிய அளவுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது. போதிய அளவுக்கு மழை பெய்யும்.
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் இந்த ஆண்டு, வட தமிழகத்தில் சராசரியையொட்டியும், டெல்டாவுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், தென் மாவட்டங்களுக்கும், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் 30 சதவீதம் வரை கூடுதலாகவும் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை தாமதமடைந்தாலும் டிசம்பரிலும் ஜனவரி 15-ம் தேதி வரையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT