Last Updated : 05 Nov, 2018 09:57 AM

 

Published : 05 Nov 2018 09:57 AM
Last Updated : 05 Nov 2018 09:57 AM

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்த பிறகும் பொன்னேரியில் தொடங்கப்படாத பாதாள சாக்கடை திட்டம்: திட்டச் செலவு ரூ.36 கோடியில் இருந்து ரூ.77 கோடியாக உயர்வு

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, 7 ஆண்டுகள் கடந்தும் பொன்னேரி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படாததால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பொன்னேரி தேர்வுநிலை பேரூராட்சி, வருவாய் கோட்டத் தலைநகராக விளங்குகிறது.

8.04 சதுர கி.மீ. பரப்பளவில், 265 தெருக்கள் அடங்கிய 18 வார்டுகள் உள்ள இப்பேரூராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.ஆரணி ஆற்றில் கழிவுநீர்பொன்னேரி பேரூராட்சி பகுதியில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் கால்வாய்கள் மூலம், ஆரணி ஆறு, ஏரி, குளங்களுக்குச் செல்வதால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தவிர்க்க, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. ஆனால், அப்பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மக்கள் எதிர்ப்புஇதுகுறித்து, சமூக ஆர்வலர் முகமது சகில் தெரிவித்ததாவது: பொன்னேரி பேரூராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படும் என, கடந்த 2011-ம் ஆண்டு, ஜூலை மாதம் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 51.24 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கவும், 5 கழிவுநீர் சேகரிக்கும் நிலையங்கள், 65.82 லட்சம் லிட்டர் திறனுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.கழிவுநீர் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தேர்வு செய்யப்பட்ட 6 இடங்களில், ஒரு இடத்துக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது.

இதைக் காரணம் காட்டியே 5 ஆண்டுகள் கடந்தன. பிறகு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டது.திட்டச் செலவு உயர்வுமுதலில் ரூ.36 கோடி செலவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட இத்திட்டத்தின் திட்ட மதிப்பு, காலதாமதம் காரணமாக, ரூ.56 கோடியாக உயர்ந்தது.

ஆண்டுகள் கடந்த வண்ணம் இருந்ததால், ரூ.56 கோடியில் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாது என்பதால், ரூ.54.78 கோடியில் ஒரு கட்டமாகவும், ரூ.21.93 கோடியில் மற்றொரு கட்டமாகவும் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.தொடர்ந்து, முதல் கட்டப் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்ததாரர் பணிகளை துவங்க இருந்தார். ஆனால், கழிவுநீர் சேகரிப்பு நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்காக தேர்வு செய்யப்பட்ட இடங்கள் மேய்க்கால் புறம்போக்கு மற்றும் அனாதீனம் உள்ளிட்டவையாக இருக்கின்றன. ஆகவே, அவ்விடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள், பேரூராட்சியிடம் ஒப்படைப்பது காலதாமதமாகிக் கொண்டே வருவதால், பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

மக்கள் பாதிப்புஇதனால், நீர் நிலைகள் கழிவுநீரால் வீணாகி வருகின்றன. பாதாள சாக்கடை திட்டத்தை காரணம் காட்டியே பல ஆண்டுகளாக போதிய மழைநீர் கால்வாய் மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால், சிறு மழை பெய்தால் கூட பொன்னேரி பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.ஆகவே, இனியாவது பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை தொடங்கி துரிதமாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

விரைவில் பணி தொடக்கம்இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாதாள சாக்கடை திட்டத்தின் முதல் கட்டப் பணியில், 2 கழிவுநீர் சேகரிப்பு நிலையங்கள், ஒரு சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஹரிஹரன் பஜார், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கள்ளுக்கடைமேடு ஆகிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்களை பேரூராட்சியிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணி மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பிறகு, பாதாள சாக்கடை பணி தொடங்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x