Published : 07 Nov 2018 03:01 PM
Last Updated : 07 Nov 2018 03:01 PM
'சர்கார்' படத்தின் பேனரைக் கிழித்ததாக எழுந்த புகார் தொடர்பாக தாக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள ஈராளச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). சென்னை தாம்பரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளிப் பண்டிகைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வந்துள்ளார். இவர், விஜய் ரசிகர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், 'சர்கார்' படத்துக்காக ஈராளச்சேரி பகுதியில் விஜய் ரசிகர்கள் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் பத்துக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களின் படம் இருந்துள்ளது. ஆனால், அதில் மணிகண்டனின் படம் இல்லை என்று கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த பேனரைக் கிழித்துள்ளார். இந்தத் தகவல் விஜய் ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் சிலர் மணிகண்டன் வீட்டுக்கு தீபாவளி அன்று (செவ்வாய்க்கிழமை) சென்றுள்ளனர். பேனர் கிழிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறும் சூழல் ஏற்பட்டது. அப்போது விஜய் ரசிகர்கள் மணிகண்டனைத் தாக்கியுள்ளனர்.
அப்போது அங்குவந்த மணிகண்டனின் சித்தப்பா ராஜேந்திரன் சமாதானம் செய்துள்ளார். மேலும், மணிகண்டனை வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் தள்ளிப் பூட்டினார். மேலும் விஜய் ரசிகர்களிடம், “நல்ல நாளில் தகராறு வேண்டாம். நாளைக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம். பேனருக்காக ஏன் சண்டை?” எனக் கூறி அனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து பூட்டிய அறையைத் திறந்தபோது மணிகண்டன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து ராஜேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் காவேரிப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமதி மற்றும் போலீஸார் விரைந்து சென்று மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மணிகண்டன் தற்கொலை தொடர்பாக அவரது தந்தை தயாளன் புகார் அளித்துள்ளார். அதில் விஜய் ரசிகர்கள் 5 பேர் மீது போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். மணிகண்டன் தற்கொலை வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முடிவில் மணிகண்டனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை காரணமாக ஈராளச்சேரி கிராமத்தில் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT