Published : 04 Aug 2014 08:46 AM
Last Updated : 04 Aug 2014 08:46 AM
மகனுக்கு அரசு வேலை கோரி 14 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார் தியாகி சுப்பிரமணியத்தின் மனைவி சாந்தா (வயது 71).
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் கோமதிபுரத்தில் வசித்த எஸ்.சுப்பிரமணியம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய இந்திய தேசிய ராணுவத்தில் “லெப்டினன்ட்” ஆக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
இந்திய சுதந்திரத்துக்காக 2-வது உலகப் போரின்போது 1943 முதல் 1945-ம் ஆண்டு வரை பணிபுரிந்தபோது பர்மா அரசால் மண்டாலி சிறையில் 1945-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரை சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு உடமைகளை பர்மாவிலேயே விட்டுவிட்டு குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்துவிட்டார்.
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெற்று வந்த சுப்பிரமணியம், தனது குடும்ப வாரிசுகளில் ஒருவரான மகன் ரமேஷுக்கு, தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏதாவது ஒரு துறையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். அவருடன் மனைவி சாந்தாவும் சேர்ந்து மகனுக்கு வேலைவாங்க அரசு அலுவலகங்களுக்கு அலையாய் அலைந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரை பல தடவை படையெடுத்தும், அமைச்சர் மூலம் முறையிட்டும் எவ்விதப் பலனுமில்லை.
இந்த நிலையில், பக்கவாத நோயால் படுத்த படுக்கையாகிவிட்ட சுப்பிரமணியம் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி உயிரிழந்தார். அதன்பிறகும் அவரது மனைவி சாந்தா தொடர்ந்து தனது மகனுக்கு வேலை கோரி போராடி வருகிறார்.
இதுகுறித்து “தி இந்து” நிருபரிடம் சாந்தா கூறியதாவது:
சுதந்திரப் போராட்ட தியாகியான எனது கணவர் உயிரிழந்ததும் அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலை மருத்துவ மாணவர்கள் பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கினோம். கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் படங்களில் எனது கணவரின் படமும் இடம்பெற்றுள்ளது. எங்களது 3 மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது. என்னுடன் வசித்து வரும் இரண்டாவது மகன் ரமேஷ்தான் எங்கள் குடும்பத்தின் சட்டப்படியான வாரிசு என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் 2000-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி சான்று வழங்கியுள்ளார். அன்றைய தினத்தில் இருந்து 14 ஆண்டுகளுக்கும் மேலாக மகனுக்கு வேலை கோரி அதிகாரிகளிடம் போராடி வருகிறேன். வாடகை வீட்டில் வறுமையில் வாடும் எங்களுக்கு அரசு வேலைதான் எதிர்காலம். தியாகிகளுக்கு உரிய கவுரவம் அளித்து வரும் முதல்வர் எனது கோரிக்கையையும் நிச்சயம் பரிசீலிப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு சாந்தா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT