Last Updated : 19 Nov, 2018 09:17 AM

 

Published : 19 Nov 2018 09:17 AM
Last Updated : 19 Nov 2018 09:17 AM

மேற்கூரையில் விரிசல், குழாயில் அடைப்பு என புதிய வீட்டில் பிரச்சினைகளை தவிர்ப்பது எப்படி?- கட்டிட ஆலோசகரிடம் கருத்து கேட்பது அவசியம் என தகவல்

வீடு வாங்குவதற்கு முன்பு வீட்டின் உறுதித்தன்மை உள்ளிட்டவை தொடர்பாக கட்டுமானப் பொறியா ளரிடம் கட்டிட ஆலோசனை பெறாததாலேயே மேற்கூரையில் விரிசல், குழாயில் அடைப்பு, செப்டிக் டேங்க் அடிக்கடி நிரம்புவது போன்ற பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.

வீடு வாங்க வேண்டும் என்பது அனைவரது கனவாகும். அதை நனவாக்கும் அவசரத்தில், பலரும் வீட்டின் உறுதித்தன்மை பற்றி தெரிந்துகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். படித்தவர்கள், படிக்காதவர்கள் என யாரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

‘பழைய வீடு வாங்கினால்தான் பிரச்சினை வரும். புதிய வீடு வாங்கினால் எந்த பிரச்சினையும் வராது’ என்ற எண்ணமும் பரவலாக உண்டு. சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்குப் பிறகு, இந்த எண்ணம் மாறத் தொடங்கியது. வீடு வாங்கும்போது அதன் உறுதித்தன்மை பற்றி மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.

இருப்பினும், பட்ஜெட்டுக்கு ஏற்ற வீட்டை வாங்குவது, வங்கிக் கடன் பெறுவது, வீட்டு விலையை பேரம்பேசி குறைப்பது ஆகியவற் றில் காட்டும் அக்கறையை, வீட்டின் உறுதித்தன்மையை உறுதி செய்துகொள்வதில் பலரும் காட்டு வது இல்லை என்பதே உண்மை.

வீடு வாங்கும்போது, வெறுமனே கட்டுநரை மட்டும் நம்பக்கூடாது. கட்டிட ஆலோசகரின் கருத்தைக் கேட்பது அவசியம். ஆனால், மக்களிடம் இதுகுறித்த விழிப்பு ணர்வு இன்னும் ஏற்படவில்லை.

இதுகுறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது:

நடுத்தர குடும்பத்தினர், உயர் நடுத்தர குடும்பத்தினர் எப்படியோ சிரமப்பட்டு ஒரு வீட்டை வாங்கி விடுகின்றனர். அதன் பிறகு பல வகைகளில் அவதிப்படுகிறார்கள். வீடு வாங்கிய பிறகு குடிநீர் குழாயில் அடைப்பு, அதை சரி செய்ய ஆயிரக்கணக்கில் செலவு, குளியலறை சுவரில் தண்ணீர் கசிவு, அதை சரிசெய்ய சுவர் முழு வதையும் உடைத்துப் பார்ப்பது, அதற்கும் ஆயிரக்கணக்கில் செலவு, மேற்கூரையில் விரிசல், அடிக்கடி செப்டிக் டேங்க் நிரம்பி வழிவது என பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.

இதற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்துகொள்வது அவசியம். வீடு கட்டுவதற்கு முன்பு முறையாக மண் பரிசோதனை செய்யப்பட்டதா, ஸ்டக்சுரல் இன்ஜினீயரைக் கொண்டு கட்டிட வடிவமைப்பு உருவாக்கியுள்ளனரா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

மேலும், வீட்டின் அடித்தள வரைபடம், பிளம்பிங் வரைபடம், எலெக்ட்ரிக்கல் லைன் வரைபடம், மேற்கூரை ஸ்டீல் விவரம் (ஒரு சதுர அடிக்கு மூன்றரை கிலோ முதல் 5 கிலோ வரை ஸ்டீல் இருக்க வேண்டும்), குறைந்தபட்சம் 20 அடி சாலை வசதி உட்பட 65 வகையான விவரங்கள் அடங்கிய பட்டியலைப் பெற வேண்டும்.

‘பிளாட் டு கீ’ என்பார்கள். அதாவது மனையைப் பார்த்தல், மண் பரிசோதனை செய்தல் தொடங்கி, வீடு கட்டி, வீட்டு சாவியைப் பெறுவது வரை அனைத்து நிலைகளிலும் கட்டு மானப் பொறியாளரின் ஆலோச னையைப் பெற வேண்டும். இதற்கு, இட அளவுக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x