Published : 06 Nov 2018 08:56 AM
Last Updated : 06 Nov 2018 08:56 AM
‘பரிவாஹன்’ இணையதள சர்வர் பிரச்சி னையால் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டீஓ), 60-க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக 3,000-க்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர்.
6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய வாகனங்களைப் பதிவு செய்கின்றனர். வாகனங்களுக்கு பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உள்ளிட்ட இதர வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இங்கு நடக்கின்றன.இந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் அனைத்து ஆர்டீஓ அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களில், ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் ‘சாரதி’ (பெயர்ப்பு-4) மென்பொருள் வாயிலாக விண்ணப்பிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், பழகுநர் உரிமம், ஓட்டுநர்உரிமம், முகவரி மாற்றம் உட்பட அனைத்துபணிகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கப்பட்டது. https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, உரிய தொகையை ஆன்லைனில் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதனால், ஆர்டீஓ அலுவலகங்களில் செயல்பட்டுவந்த கட்டண கவுன்ட்டர்கள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த இணையதளத்தில் தற்போது தொடர்ந்து சர்வர் பிரச்சினை ஏற்படுவதால், பொதுமக்கள் இந்த சேவையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது:‘‘ஓட்டுநர் உரிமம் பெற, இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதற்கான தொகையையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்தது. உரிய தொகையை செலுத்திய பிறகு, ஒப்புகைச் சீட்டு அல்லது பணம் கட்டிய ரசீதுடன் ஆர்டீஓ அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சென்று தகுந்த டெஸ்ட்டில் கலந்துகொண்டு, புகைப்படம் எடுத்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து சர்வர் பிரச்சினை இருப்பதால் இந்த சேவையைப் பெறுவது சிரமமாக இருக்கிறது. சர்வர் இரவு 11 மணிக்கு மேல்தான் பிரச்சினை இல்லாமல் இயங்குகிறது.ஆர்டீஓ அலுவலகத்துக்கு நேரடியாக சென்றாலும் விண்ணப்பங்களைப் பெற மறுக்கின்றனர். அங்கிருந்த கவுன்ட்டர்கள் மூடப்பட்டுவிட்டதாக கூறி திருப்பி அனுப்பு கின்றனர். இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
எனவே, இணையதள சர்வரின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். சர்வர் பிரச்சினை தீரும் வரை, ஆர்டீஓ அலுவலகங்களில் இந்த சேவைகளை நேரடியாக வழங்க வேண்டும்’’ என்றார்.இதுபற்றி ஆர்டீஓ அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைப் பலரும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் சர்வரில் பிரச்சினை ஏற்படுவது உண்மைதான். இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகத்துக்கு தெரிவித்துள்ளோம். சர்வரின் தரத்தை உயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை எளிமைப்படுத்துமாறு வேண்டு கோள் வைக்கின்றனர். இந்த கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT