Last Updated : 27 Nov, 2018 11:37 AM

 

Published : 27 Nov 2018 11:37 AM
Last Updated : 27 Nov 2018 11:37 AM

 16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்: கோவா அணிக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் குவித்த புதுச்சேரி வீரர் நேயன் காங்கேயன்

16 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவா அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 302 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் புதுச்சேரி வீரர் நேயன் காங்கேயன்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விஜய் மெர்சன்ட் கோப்பைக்கான 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக புதுவை பல்மைரா மைதானத்தில் புதுவை-கோவா அணிகள் மோதும் 3 நாள் போட்டி  கடந்த 24-ல் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற கோவா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கோவா அணி முதல் இன்னிங்ஸில் 111.4 ஓவரில் 274 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதனையடுத்து புதுவை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக நேயன் காங்கேயன், சந்தோஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். 2 பேரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். நேயன் காங்கேயன் அரை சதம் அடித்தார்.  இந்த நிலையில் சந்தோஷ் குமார் 95 பந்தில் 24 ரன் எடுத்த நிலையில் ககோடி பந்தில் மணிஷிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன் பிறகு கேப்டன் செசாங் கள மிறங்கினார். 2 பேரும் நிதானமாக ஆடினார்கள். நேயன் காங்கேயன் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.

2-வது நாளான 25-ம் தேதி ஆட்ட முடிவில்  புதுச்சேரி அணி 68 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்தது. நேயன் காங்கேயன் 106 ரன்னுடனும், கேப்டன் செசாங் 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

26-ம் தேதி ஆட்டத்தில் தொடக்க வீரர் நேயன் காங்கேயன் கோவா அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். எதிர்முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நேயன் காங்கேயன் சிறப்பாக விளையாடினார். கேப்டன் செசாங் 50 ரன்னில் அவுட் ஆனார்.  ஆகாஷ், டேவின் ஆல்வின், ரோகன் , கார்த்திராஜா ஆகியோர்  அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனால் நேயன் காங்கேயன் இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். 396 பந்தில் அவர் இரட்டை சதம் கடந்தார். மீண்டும் அதிரடி ஆட்டத்தை  நேயன் காங்கேயன் வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக 490 பந்தில் 302 ரன் எடுத்து சாதனை படைத்தார். அப்போது புதுவை அணி  164.2 ஓவரில் 479 ரன் எடுத்திருந்தது. அத்துடன் 3 நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நேயன் காங்கேயனுடன் 40 ரன் எடுத்து  நவீன் கார்த்திகேயன் அவுட் ஆகாமல் இருந்தார்.

3 நாள் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் புதுவை அணி முன்னிலை பெற்றதால் 3 புள்ளி கிடைத்தது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x