Published : 28 Aug 2014 10:00 AM
Last Updated : 28 Aug 2014 10:00 AM

இறந்த பெண் உயிருடன் இருப்பதாக சான்றிதழ்: சேலம் டாக்டர் உட்பட 5 பேர் மீது நடவடிக்கை

இறந்த பெண்ணுக்கு, உயிருடன் இருப்பதாக சான்றிதழ் அளித்த 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி விஜயா. கடந்த 2008-ம் ஆண்டு சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நடந்த சாலை விபத்தில், விஜயா படுகாயம் அடைந்தார். சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இறந்து விட்டார்.

ஆனால், தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரான டாக்டர் ஜெயராமன், விஜயாவை மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்து விடுவிப்பதாக (டிஸ்சார்ஜ்) போலியான சான்றிதழ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், ராமதாஸ், மகள்கள் சாய்ராணி, சாய்பாக்கியம், மகன் சாய் வெங்கடேசன் ஆகியோர் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், இன்சூரன்னஸ் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இன்சூரன்ஸ் நிறுவனம், தனியார் மருத்துவமனையில், விஜயா சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டது. ஆனால், இந்த ஆவணங்களை சமர்ப்பிக்காமல் தனியார் மருத்துவமனை காலம் தாழ்த்தி வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், டாக்டர் ஜெயராமன் நீதிமன்றத்தில் ஆஜராக பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து, டாக்டர் ஜெயராமன் நீதிமன்றத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தார். அப்போது கொடுக்கப்பட்ட ஆவணத்தில் மருத்துவமனையில் விஜயா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அன்று, அங்கு அவர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

எனவே, இறந்த பெண் எப்படி உயிருடன் இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது என நீதிபதி ராஜசேகர், டாக்டரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு டாக்டர் ஜெயராமன், உறவினர்கள் கேட்டு கொண்டதின்பேரில் அவ்வாறு சான்றிதழ் தரப்பட்டது என்று பதில் தெரிவித்தார்.

கடந்த திங்கள்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகர், நீதிமன்றத்தையும், இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் போலி ஆவணம் தயாரித்து இறந்த பெண்ணான விஜயாவுக்கு, உயிருடன் இருப்பதாக போலி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, டாக்டர் ஜெயராமன், விஜயாவின் கணவர் ராமதாஸ், மகள் சாய் ராணி, சாய் பாக்கியம், மகன் சாய் வெங்கடேசன் ஆகிய 5 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x