Last Updated : 05 Nov, 2018 09:23 AM

 

Published : 05 Nov 2018 09:23 AM
Last Updated : 05 Nov 2018 09:23 AM

அரசு அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் 240 நிறுவனங்கள்: தரமற்ற எம்-சாண்ட் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம்; அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார்

தரமற்ற எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல் மணல்) தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அரசு அங்கீகாரம் இல்லாமல் 240 நிறுவனங்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் எம்-சாண்ட் தயாரித்து விற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆற்று மணல் அள்ளுவதைத் தடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீதிமன்றம் அனுமதித்த இடங்களில் மட்டுமே ஆற்று மணல் எடுத்து விற்கப்படுகிறது. மலேசியாவில் இருந்து இறங்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

“ஆற்று மணலுக்கு ஆன்-லைனில் பதிவு செய்து நீண்டநாள் காத்திருக்க வேண்டியுள்ளது. வெளிநாட்டு மணலுக்கு அதிக விலை நிர்ணயித்துள்ளனர். எம்-சாண்ட் தரமற்றதாக இருப்பதால் அதைப் பயன்படுத்த அச்சமாக இருக்கிறது” என்று பொதுமக்களும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்போரும் குற்றம்சாட்டுகின்றனர்.

முழு நம்பிக்கை இல்லை

தமிழ்நாட்டில் 320-க்கும் மேற்பட்ட எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு நிறுவனங்கள் குவாரி துகள்கள் கலந்த எம்-சாண்ட் விற்பதாக புகார் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற பிறகே எம்-சாண்ட் விற்பனை செய்ய வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்களுக்கும், அவ்வாறு அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து மட்டுமே எம்-சாண்ட் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கும் அரசு அறிவுறுத்தியது.

ஆனால், எம்-சாண்ட் தரம் பற்றி மக்களுக்கு இன்னமும் முழு நம்பிக்கை வரவில்லை. பல நிறுவனங்கள் அதிக விலைக்கு எம்-சாண்ட் விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எம்-சாண்ட் பயன்படுத்துமாறு பொது மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அரசு கூறுகிறது. அதேநேரத்தில் தரமற்ற எம்-சாண்ட் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு அங்கீகாரம் பெற வேண்டும். இல்லாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து எம்-சாண்ட் தயாரிப்பு ஆலை ‘சீல்’ வைக்கப்படும் என்று அரசு கடுமையான எச்சரிக்கை விடுக்காததால் தரமற்ற எம்-சாண்ட் விற்பனை தாராளமாக நடப்பதாக கட்டுநர்கள் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உயர் அதிகாரி கூறும்போது, “தமிழ்நாட்டில் சுமார் 300 எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 60 நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளன. மீதமுள்ள 240 நிறுவனங்களும் விரைவில் அரசு அங்கீகாரம் பெற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவற்றில், 50 நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், குறிப்பிட்ட முகவரியில் ஆள் இல்லை என்று திரும்பி வந்துவிட்டது. மீதமுள்ள 190 நிறுவனங்கள் தரமான எம்-சாண்ட் தயாரிக்கின்றனவா என்று ஆய்வு செய்து வருகிறோம்.

குறிப்பிட்ட காலத்துக்குள் அரசு அங்கீகாரம் பெற வேண்டும் என்று எம்-சாண்ட் நிறுவனங்களுக்கு கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கவில்லை. சொந்தமாக குவாரி வைத்திருப்பவர்கள் குறைந்த விலைக்கு எம்-சாண்ட் விற்கின்றனர்” என்றார்.

அரசின் கண்காணிப்பு தேவை

சமூக ஆர்வலர்கள், “வீடுகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் எல்லாம் மக்களின் உயிர் சம்பந்தப்பட்டவை என்பதால் எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசின் தீவிர கண்காணிப்பு அவசியம். எம்-சாண்ட் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது” என்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x