Published : 09 Nov 2018 05:04 PM
Last Updated : 09 Nov 2018 05:04 PM
பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருந்த கர்ப்பிணி பெண் காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னலெட்சுமி. இவர், திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து காவல் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். 8 மாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னலெட்சுமியை அவரது குடும்பத்தினர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அன்னலெட்சுமியை உள் நோயாளியாக சேர்க்க மறுத்ததாகத் தகவல் பரவியது.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கண்ணனிடம் கேட்டபோது, “பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் வந்த அந்தப் பெண்ணுக்கு தனி அறை ஒதுக்கி சிகிச்சை அளிக்குமாறு கேட்டனர். ஆனால், தனி அறை இல்லை என்பதால் தனி வார்டில் சிகிச்சை பெறுமாறு கூறினோம். இதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்று யாரும் கூறவில்லை.
தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட 2 பேர் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT