Published : 23 Nov 2018 09:01 AM
Last Updated : 23 Nov 2018 09:01 AM
வடக்கு சல்லிக்குளத்தில் ‘கஜா’ புயலால் 750 ஏக்கர் தோட்டக் கலைப் பயிர்கள், காய்கறிகள் அழிந்துள் ளன. ஒரு வாரமாக மின்சாரம் இன்றித் தவிக்கும் மக்கள், சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களைக்கூட அகற்ற மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சி வடக்கு சல்லிக்குளத்தில், மா, தென்னை, சவுக்கு, புளி, முந்திரி, இலுப்பை உட்பட தோட்டப்பயிர்களை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் கத்திரி, வெண்டை, கொத்தவரை, பரங்கி, பாகல், புடலை, கார்த்திகை கிழங்கு உட்பட பல்வேறு காய்கறி வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், ‘கஜா’ புயலின் கோரத் தாண்டவத்தில் வாழ்வாதாரத்தை இழந்து இப்பகுதி விவசாயிகள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து வடக்கு சல்லிக்குளத்தைச் சேர்ந்த, இறால் தீவன விற்பனை நிலைய ஊழியர் சுரேந்திரன்(28) கூறியதாவது:
‘‘கஜா புயலால் வடக்கு சல்லிக் குளத்தில் இருந்த தோட்டப்பயிர் கள், காய்கறி வகைகள் உட்பட சுமார் 750 ஏக்கரில் தோட்டக்கலைப் பயிர்கள் முழுமையாக அழிந்துள் ளன. 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், 500 கோழிகள் இறந்துவிட்டன. 150-க்கும் மேற்பட்ட குடிசைகள் பகுதியாகவும் நூற்றுக்கும் மேற் பட்ட குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், ஒரு டிரான்ஸ்பார்மரும் சாய்ந்துவிட்டன.
இளைஞர்களின் முயற்சியால்...
கடந்த 7 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம். புயலின் காரண மாக சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றக்கூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. சல்லிக்குளத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் அத்தனை மரங்களையும் அகற்றி பாதை ஏற்படுத்தினர். கடல் நீர் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு வரை உட்புகுந்து குளங்கள் அனைத்தும் உவர் நீராகிவிட்டது. தோட்டங்களிலும் உப்பு நீர் ஏறியுள்ளது. இனி விவசாயம், தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்ய முடியுமா என்பதே கேள்விக்குறிதான்’’ என்றார்.
7 நாட்களுக்கு 4 மூட்டை அரிசி
தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி சுதாகரன் (37) கூறியதாவது: ‘‘பாரதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி, பாலம் இலுப்பைத்தோப்படி ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 முகாம்களில் 1,200 பேர் தங்கியுள்ளனர். கடந்த 16-ம் தேதி வந்த அதிகாரிகள் 4 மூட்டை அரிசி தந்து விட்டு சென்றார்கள். கிராம நிர்வாக அலுவலர் ரூ.5 ஆயிரம் கொடுத்துவிட்டுச் சென்றார். அதை வைத்துதான் கடந்த 7 நாட்களாக சாப்பிட்டு வருகிறோம். ஜெனரேட்டர், டீசலுக்கான தொகையைக் கொடுத்து விடுவதாக சொல்லி இருக்கிறார்கள்.
இழப்பீடு தொடர்பான கணக்கிடும் பணி இன்னமும் தொடங்கவில்லை. இதனால் குடிசை வீடுகளில் விழுந்த மரங்களை அகற்றினால் நிவாரணம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் யாரும் அகற்றாமல் உள்ளனர். மேலும் தோட்டங்களில் விழுந்துள்ள நூற்றுக்கணக்கான மரங்களை அகற்ற அரசு உதவ வேண்டும்’’ என்றார்.
வாழ்வாதாரம் மீட்கப்படுமா?
வாழ்வாதாரத்தை இழந்து நிற் கும் வடக்கு சல்லிக்குளம் மக்க ளுக்கு அவ்வப்போது வரும் தனியார் அமைப்புகள் ரொட்டி, பிஸ்கெட் ஆகியவற்றை கொடுப் பதுதான் ஒரே ஆறுதல். எனவே, வடக்கு சல்லிக்குளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேதாரண்யம் பகுதியில் தொற்றுநோய் அச்சம்
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் உட்பட பல்வேறு பகுதிகளில் புயல் தாக்குதலில் சுமார் 1.80 லட்சம் கால்நடைகள் இறந்துள்ளன. 2 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தும் முறிந்தும் விழுந்தன. இவற்றை அகற்றும் பணி இன்றளவும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மழை பெய்ததால் முறிந்து விழுந்த மரக்கிளையில் உள்ள இலைகள் மழைநீரில் நனைந்து ஆங்காங்கே பெரும் குப்பையாகக் குவிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அரிச்சந்திரா ஆறு உட்பட பல்வேறு ஆறுகளில் விழுந்து இறந்த கால்நடைகளால் வேதாரண்யம், தலைஞாயிறு, வேட்டைக்காரனிருப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே பொதுமக்கள், குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை சார்பில் புகை மருந்து அடிப்பது, குடிநீரில் குளோரின் கலப்பது ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இறந்த கால்நடைகளை அகற்றும் பணியிலும், மரங்களை வெட்டும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்ட கொள்ளை நோய்த் தடுப்பு வல்லுநர் டாக்டர் லியாகத் அலி கூறியதாவது: ‘‘மாவட்டத்தில் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க 860 மருத்துவப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தற்போது லாரிகளில் தண்ணீர் அனுப்பப்படுகிறது. அந்த தண்ணீரில் குளோரின் கலக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT